சுவிஸிலிருந்து தாயகம் திரும்பியவர் மீது சுன்னாகம் பொலிஸார் தாக்குதல்!

சுவிஸ் நாட்டிலிருந்து தாயகம் திரும்பிய ஒருவர், சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துத் தாக்கப்பட்டுள்ளார்.

உடுவில் பகுதியைச் சேர்ந்த 61 வயதான ஒருவர் தனது பரம்பரை சொத்தை மீட்பதற்கு நாட்டிற்கு திரும்பியுள்ள நிலையில், இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்

உடுவில் மகளிர் கல்லூரிக்கு அண்மையிலுள்ள பல கோடி ரூபாய் பெறுமதியான வீடு மற்றும் சொத்துக்குச் சொந்தக்காரரான மொறிஸ் அருணாசலம் பிரகாஷ் என்பவர், தனது பரம்பரை சொத்தை மீட்க தாயகம் திரும்பியுள்ளார். அது தொடர்பான ஆவணங்களை உடுவில் பிரதேச சபையில் சமர்ப்பித்து அவற்றுக்கான உரிமத்தையும் கோரியுள்ளார்.

அவரது கோரிக்கையை ஏற்பது தொடர்பில் உடுவில் பிரதேச சபையால், பகிரங்க அறிவித்தல் கோரப்பட்டது. எனினும் பகிரங்க அறிவித்தல் காலப் பகுதிக்குள் வேறு எவரும் அந்த சொத்திக்கு உரிமை கோரவில்லை. அதனால் தனது காணிக்குச் சென்று அதனை பராமரிப்பதற்கு சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் குடும்பத்தலைவர் அனுமதி பெற்றுள்ளார். அதற்கமைவாக தனது காணிக்குள் நேற்று முன்தினம் மாலை சென்றுள்ளார்.

அங்கு தனியார் பாதுகாப்புச் சேவையின் காவலாளி ஒருவர் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளார். எனினும் அவரைக் கடமைக்கு அமர்த்தியவர் யார் என்பது உரிமையாளருக்குத் தெரியவில்லை.

இந்த நிலையில் உரிமையாளர் அங்கு சென்றதும், அங்கிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் வெளியேறியுள்ளார். அவர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்துக்குச் சென்று காணி உரிமையாளருக்கு எதிராக முறைப்பாடும் வழங்கியுள்ளார்.

அந்த முறைப்பாட்டின் அடிப்படையில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர், காணி உரிமையாளரை நேற்று (புதன்கிழமை) கைதுசெய்து சுன்னாகம் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அவரை பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைத்து வாக்குமூலம் பெற்றபின்னர், நேற்று மாலை மல்லாம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்துவதற்காக, தெல்லிப்பழை வைத்தியசாலையில் சட்ட மருத்துவச் சான்றிதழைப் பெற்றுக்கொள்வதற்கு பொலிஸார் அழைத்துச் சென்றுள்ளனர்.

இதன்போது கண்டுபிடிக்கப்பட்ட காயங்கள் தொடர்பான வினவப்பட்டபோது, பொலிஸார் தம்மை தாக்கியதாக குடும்பத்தலைவர் குறிப்பிட்டுள்ளார். அவர் தற்போது தெல்லிப்பழை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.

சிங்கள மற்றும் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரே தன்னைத் தாக்கியதாக அவர் தமது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

அவரால் குற்றஞ்சாட்டப்படும் பொலிஸ் உத்தியோகத்தர், மல்லாகம் மாதா ஆலயத்துக்கு முன்பாக இளைஞன் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழக்கக் காரணமானவரென்றும் தெரிவிக்கப்படுகிறது.

Related Posts