சுவாதி கொலை வழக்கு-கொலைகாரன் அடையாளம் காணப்பட்டார்

சென்னை பெண் பொறியியலாளர் சுவாதியை கொலை செய்த கொலைகாரனை நுங்கம்பாக்கம் புகையிரத நிலைய `கேன்டீன்’ ஊழியர் காவல்துறைக்கு அடையாளம் காட்டினார்.

swathi

கொலை நடந்தது எப்படி? என்பது பற்றி அவர் பரபரப்பான வாக்குமூலம் கொடுத்து உள்ளார்.

கடந்த 24-ந் தேதி காலை 6.30 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கம் புகையிரத நிலையத்தில் சுவாதி யை துடிக்க, துடிக்க வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம், தமிழகத்தையே உலுக்கிவிட்டது.

சுவாதியை கொடூரமாக வெட்டி கொன்ற கொலைகாரனை காவல் துறை இன்னும் பிடிக்கவில்லை. கண்காணிப்பு கேமராவில் பதிவான கொலைகாரன் புகைப்படத்தை காவல் துறை வெளியிட்டனர். அந்த புகைப்படத்தில் இருப்பவர் தான், சுவாதியை கொலை செய்த கொலைகாரன் என்று அடையாளம் காணப்பட்டு உள்ளது.

நுங்கம்பாக்கம் புகையிரத நிலையத்தில் காலை நேரத்தில் சுவாதி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர், கண்காணிப்பு கேமரா படத்தில் இருக்கும் கொலையாளியை அடையாளம் காட்டி உள்ளார்.

சுவாதி கொல்லப்பட்ட நுங்கம்பாக்கம் ரெயில் நிலைய 2-வது நடைமேடையில் புகையிரத கேன்டீன் உள்ளது. அன்றைய தினம் காலை வேளையில் இட்லி, தோசை விற்பனை ஆகிக்கொண்டு இருந்தது. சிலர் சாப்பிட்டுக்கொண்டு இருந்தனர்.

வியாபாரம் நடந்து கொண்டிருந்த அந்த நேரத்தில் தான், சுவாதி வெட்டி கொல்லப்பட்டார். இதை கேன்டீனில் இருந்த ஊழியர் ஒருவர் நேரில் பார்த்து உள்ளார். அதிர்ச்சியில் அவர் உறைந்து போய்விட்டார். பயத்தில் இதுகுறித்து பேசாமல் இருந்து வந்தார்.

இந்த நிலையில் காவல்துறை அந்த புகையிரத கேன்டீனில் விசாரணை மேற்கொண்டபோது, கேன்டீன் ஊழியர்களிடம் கொலைகாரனின் புகைப்படத்தை காட்டினார்கள்.

அப்போது கொலை சம்பவத்தை நேரில் பார்த்த அந்த கேன்டீன் ஊழியர், சுவாதியை கொன்ற கொடூர கொலைகாரன் இவர் தான் என்று அடையாளம் காட்டினார். கொலைக்காட்சியை பற்றியும் அவர் காவல்துறையினரிடம் விவரித்தார். இந்த வழக்கில் அவர் முக்கியமான கண்கண்ட சாட்சி ஆவார்.

கொலை சம்பவம் குறித்து அவர் காவல்துறையினரிடம் கொடுத்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

கொலைகாரனும், கொலை செய்யப்பட்ட அந்த பெண்ணும் சிறிது நேரம் கடை அருகே நின்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்கள் என்ன பேசினார்கள்? என்பதை நான் கவனிக்கவில்லை. ஆனால் காரசாரமாக சிறிது நேரம் பேசினார்கள்.
திடீரென்று `அய்யோ… அம்மா…’ என்று குரல் கேட்டது. கொலைகாரன் பக்கவாட்டில் சற்று பின்பக்கமாக நின்று அந்த பெண்ணை அரிவாளால் வெட்டினான். உடனே அந்த பெண் ரத்தம் பீறிட்ட நிலையில் அருகில் இருந்த இருக்கையில் விழுந்தார். பின்னர் தரையில் சாய்ந்து விட்டார்.

சிறிது நேரம் அவர் உயிருக்கு போராடியபடி இருந்தார். அதிர்ச்சியில் இருந்த எங்களால் அப்போது ஒன்றும் செய்யமுடியவில்லை. உடனே அந்த கொலைகாரன் மின்னல் வேகத்தில் தப்பி சென்றுவிட்டான். அதன்பிறகு ஓடிச்சென்று பார்த்தோம். அந்த பெண் அதற்குள் இறந்துவிட்டார்.
இவ்வாறு கேன்டீன் ஊழியர் தெரிவித்து உள்ளார்.

இந்த படுகொலை சம்பவம் பற்றி சென்னை மாநகர காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எழும்பூர் ரெயில்வே காவல்துறை முதற்கட்டமாக வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

தற்போது அந்த வழக்கு நுங்கம்பாக்கம் காவல்துறை நிலையத்துக்கு மாற்றப்பட்டு உள்ளது. போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் நேரடியாக இந்த வழக்கை தினமும் ஆய்வு செய்துவருகிறார்.

கூடுதல் கமிஷனர் சங்கர், இணை கமிஷனர் மனோகரன், துணை கமிஷனர் பெருமாள் ஆகியோர் மேற்பார்வையில் உதவி கமிஷனர்கள் தேவராஜ், முத்துவேல்பாண்டி, கலிதீர்த்தான் ஆகியோர் தலைமையில் 8 இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய 8 தனிப்படை போலீசார் கொலையாளியை பிடிக்க களத்தில் இறக்கப்பட்டு உள்ளனர். கூடுதல் கமிஷனர் சங்கர் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கண்காணிப்பு கேமரா புகைப்படத்தில் உள்ள வாலிபர் தான் கொலை செய்திருக்க வேண்டும் என்று சந்தேகித்தோம். தற்போது அவர்தான் கொலையாளி என்று உறுதிபட தெரியவந்துள்ளது. கொலை செய்யப்பட்ட சுவாதிக்கு, ஏற்கனவே மிரட்டல் இருந்துள்ளது. ஆனால் அவர் அதுகுறித்து காவல்துறை நிலையத்தில் புகார் எதுவும் கொடுக்கவில்லை.

ஆனால் அவர் தனது பெற்றோர், நெருங்கிய தோழி மற்றும் தனது அக்காவிடம் இந்த மிரட்டல் குறித்து கண்டிப்பாக தெரிவித்திருக்க வேண்டும். துக்கத்தில் இருந்த சுவாதியின் பெற்றோரிடமும், தோழியிடமும், அக்காவிடமும் முதலில் இதுதொடர்பாக விசாரிக்க முடியவில்லை.

தற்போது தான் மெதுவாக விசாரணையை தொடங்கி உள்ளோம். தகவல்கள் கிடைத்த வண்ணம் உள்ளது.

கொலைகாரன் பற்றி ஏராளமான தகவல்கள் வந்தவண்ணம் உள்ளது. கொலைகாரன் தப்பமுடியாது. கொலைகாரன் பற்றி தகவல்களை நாங்கள் வெளிப்படையாக சொல்ல முடியாது.

இந்த விவகாரம் சென்னை ஐகோர்ட்டு விசாரணையில் உள்ளதால், விசாரணை விவரங்களை ரகசியமாக வைத்துள்ளோம். கண்டிப்பாக கொலைகாரனை இன்னும் ஓரிரு நாட்களில் பிடித்து விடுவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கொலை நடந்த தினமான கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து இதுவரை காவல்துறைக்கு 100-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

கொலைக்கு முக்கிய தடயமாக கொலையாளி பயன்படுத்திய அரிவாள் மட்டும் கிடைத்து உள்ளது. அரிவாளில் இருந்த கொலையாளி கைரேகை பதிவு செய்யப்பட்டு உள்ளது. சுவாதியின் கைப்பை கொலை நடந்த இடத்திலேயே கிடந்தது. அது கைப்பற்றப்பட்டு உள்ளது.

Related Posts