“சுழிபுரம் பாணவெட்டை பகுதியில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட மாணவி துன்புறுத்தல்களின் பின் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது உடலில் உள்ள அடையாளங்களை வைத்து நம்பப்படுகிறது. எனினும் உடற்கூற்று பரிசோதனையின் பின்பே உறுதி செய்ய முடியும்”
இவ்வாறு தடயவியல் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தையடுத்து சந்தேகத்தின் அடிப்படையில் நான்கு பேர் விசாரணைக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர் என்று வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
சுழிபுரம் காட்டுபுலம் அ.த.க. பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி பயிலும் சிவனேஸ்வரன் றெஜீனா (வயது – 6 ) என்ற சிறுமியே சடலமாக மீட்கப்பட்டவராவர்.
பாடசாலைக்கு சென்ற மாணவி வீடு திரும்பாத நிலையில் தேடிய போதே கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். அவரது காதுகளிலிருந்த தோடுகளையும் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
வீட்டிற்கு சற்று தொலைவில் உள்ள தோட்ட கிணறு ஒன்றிக்குள் உள்ளாடை மாத்திரம் காணப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவரது உடலில் கழுத்தானது நெரிக்கப்பட்ட நிலையிலும், நெற்றி பகுதியில் காயங்கள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த யாழ்ப்பாணம் தடவியல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன், தடயப் பொருள்களை மீட்டனர்.
மேலும் சம்பவ இடத்தில் நேரடி விசாரணைகள் மேற்கொண்ட மல்லாகம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா, சிறுமியின் சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.
சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் என ஊர் மக்களால் அடையாளப்படுத்தப்பட்ட நான்கு பேரை வட்டுக்கோட்டை பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர்.