Ad Widget

சுழிபுரம் கொலையாளியை கொல்லப்பட்டவரின் மனைவி, அடையாளம் காட்டினார்

சுழிபுரம் காட்டுப்புலம் பகுதியில் கடந்த மாதம் இளம் குடும்பஸ்தர் ஒருவர் வாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான அறுவரில், பிரதான சந்தேக நபரை கொல்லப்பட்டவரின் மனைவி, செவ்வாய்க்கிழமை (24) அடையாளம் காட்டினார்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை மல்லாகம் நீதிமன்றில் செவ்வாய்க்கிழமை (24) இடம்பெற்றபோது, சந்தேகநபர்கள் அறுவரும் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்பட்டனர்.

வழக்கு விசாரணைக்கு ஆஜராகியிருந்த கொல்லப்பட்டவரின் மனைவியான கஜந்தன் தனுசியா, சம்பவ தினத்தன்று உறங்கிக்கொண்டிருந்த தனது கணவனை வாளால் வெட்டியவர் என ஒருவரை அடையாளம் காட்டினார்.

சாட்சிகள் மீதான விசாரணைக்காக வழக்கு தவணையை மார்ச் 10 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்த நீதவான் சின்னத்துரை சதீஸ்கரன், சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

கடந்த ஜனவரி மாதம் 20 ஆம் திகதி சுழிபுரம் காட்டுப்பகுதியில், இடம்பெற்ற வாள் வெட்டில் ம.சுஜந்தன் (வயது 28) என்பவர் உயிரிழந்திருந்தார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட மானிப்பாய் பொலிஸார் அதே பகுதியை சேர்ந்த 6 பேரை சந்தேகத்தில் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts