‘சுலக்ஸன் சுடப்பட்டார், கஜன் விபத்தில் உயிரிழந்தார்’

கொக்குவில், குளப்பிட்டியில் உயிரிழந்த மாணவர்களில் விஜயகுமார் சுலக்ஸன் (வயது 24), துப்பாக்கிக் குண்டு பட்டு உயிரிழந்ததுடன், மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்து பயணித்த மற்றைய மாணவரான கிளிநொச்சியைச் சேர்ந்த நடராசா கஜன் (வயது 23), விபத்தால் ஏற்பட்ட காயம் காரணமாக உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதவான் சி.சதீஸ்தரன், மரண விசாரணை அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கடந்த 21ஆம் திகதி அதிகாலை கொக்குவில், குளப்பிட்டி பகுதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், கொல்லப்பட்டதாக கூறப்படும் வழக்கு விசாரணை, இன்று வெள்ளிக்கிழமை (04) யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, சந்தேகநபர்களாக அடையாளம் காணப்பட்ட ஐந்து பொலிஸாரும் மன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். இதன்போது, தனது மரண விசாரணையின் அறிக்கையில், நீதவான் இவற்றை குறிப்பிட்டுள்ளார்.

‘மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற சுலக்ஸன் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு, குண்டு பாய்ந்ததில் அவர் உயிரிழந்தார். அதன் பின்னர் நிழ்ந்த விபத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக மற்றைய மாணவன் கஜன் உயிரிழந்தார்’ என நீதவான் கூறினார்.

இந்த வழக்கின் சான்றுப்பொருட்களான இரத்த மாதிரி, மாணவர்களது உடைகள், உடமைகள், மற்றும் சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்து மீட்கப்பட்ட துப்பாக்கி குண்டின் வெற்றுக்கோது என்பன குற்றப்புலனாய்வு பொலிஸாரால் நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட்டன. இது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக குற்றப்புலனாய்வு பொலிஸார், மன்றில் கூறினர்.

இந்த வழக்கு விசாரணை தொடர்பில் தம்மிடமுள்ள பெறுமதி வாய்ந்த தகவல்களை குற்றப்புலனாய்வு பொலிஸாருக்கு வழங்குவதற்கு நீதவான் அனுமதிப் பெற்றுத்தரவேண்டும் என மாணவர்கள் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணிகள் நீதவானிடம் கோரினர். சட்டத்தரணிகளிடமுள்ள தகவல்களை பெற்றுக்கொள்ளுமாறு குற்றப்புலனாய்வு பொலிஸாருக்கு நீதவான் பணித்தார்.

இதனையடுத்து, சந்தேகநபர்கள் ஐவரையும் எதிர்வரும் 18ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

கடந்த ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி அதிகாலை கொக்குவில், குளப்பிட்டி பகுதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களான கலைப்பீடத்தில் 3 ஆம் வருடத்தில் கல்வி கற்கும் கிளிநொச்சியைச் சேர்ந்த நடராசா கஜன் (வயது 23), சுன்னாகத்தைச் சேர்ந்த விஜயகுமார் சுலக்ஸன் (வயது 24) ஆகிய மாணவர்கள் உயிரிழந்தனர்.

முதலில் விபத்தால் இரண்டு மாணவர்களும் உயிரிழந்ததாக கூறிய பொலிஸார், அதன் பின்னர் அவர்கள் மீது தாங்கள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதை ஒப்புக்கொண்டனர்.

இதனையடுத்து, சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த ஐந்து பொலிஸார் கைது செய்யப்பட்டனர்.

கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு இந்த ஐந்து பேரும் குற்றப்புலனாய்வு பொலிஸாரால் அழைத்துச் செல்லப்பட்ட போது, தாங்கள் நின்று சுட்ட இடமான குளப்பிட்டிச் சந்தையின் முன்பகுதி மற்றும் மாணவர்கள் வீழ்ந்து, சடலமாக மீட்கப்பட்ட கடையின் முன்பக்கம் வரையிலும் சரியாக அடையாளம் காட்டியிருந்தனர்.

இதன்போது, அவர்கள் நின்று சுட்டதாகக் கூறப்பட்ட இடத்தில், சொஹோ பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில், துப்பாக்கி சன்னத்தின் கோது ஒன்றும் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts