சுற்றுலா மையங்கள் உரிய முறையில் பராமரிக்கப்படுவதில்லை: முதலமைச்சர்

வடமாகாணத்தில் சுற்றுலாப் பயணிகளைக் கவரக்கூடிய பல இயற்கைச் சுற்றுலா மையங்கள் அமைந்துள்ள போதும் அவை முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை என வட.மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

மன்னார் நகரசபை பிரிவுக்குட்பட்ட கீரி கடற்கரைப் பகுதியில், சுற்றுலாத்துறையினை மேம்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட ‘கீரி சுற்றுலா கடற்கரை’ யினை நேறறு (செவ்வாய்க்கிழமை) திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வடபகுதிக்கு வருகின்ற சுற்றுலாப் பயணிகள் சுற்றுலா மையங்கள் எதுவும் இல்லை என்ற நிலையில் சில குறிப்பிட்ட இடங்களை மட்டும் பார்த்துவிட்டு திரும்பி விடுகின்றார்கள். இக் குறைபாட்டை வடமாகாணசபை ஆரம்ப காலத்தில் பல வேலைகளின் மத்தியில் சுற்றுலா சம்பந்தமான விடயங்களில் உடனடியாகக் கவனம் செலுத்த முடியவில்லை.

இருப்பினும் தற்போது சுற்றுலாத்துறைக்கு தனியான அலகொன்றினை அமைத்து மீள புதுப்பிக்கக்கூடிய சுற்றுலா மையங்களை அடையாளம் கண்டு, அவற்றை புனரமைத்து மக்கள் பாவனைக்காக பொழுதுபோக்கு மையங்களாக மாற்றி அமைத்து வருகின்றோம்.

சுற்றுலா மையங்களை அமைத்துவிட்டால் மட்டும் போதாது. அவற்றை முறையாக பராமரிக்க வேண்டும். சுற்றுலாப் பயணிகள் பயமின்றி உலாவக்கூடிய விதத்தில் இப் பிரதேசம் மாற்றி அமைக்கப்படவேண்டும். வெறுமனே குடிப்பழக்கங்களுக்கும், சண்டை சச்சரவுக்குமான இடமாக மாற்றாது தமது குடும்பத்துடன் வந்து சுத்தமான கடற்காற்றை சுவாசித்து மகிழ்வுடன் திரும்பக்கூடிய இடமாக மாற்ற வேண்டும்” என முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்தார்.

Related Posts