சுற்றுச்சூழலைப் பாதுகாக்கப் பாடநூல்களையும் தாண்டிய புதிய சிந்தனை அவசியம் – விவசாய அமைச்சர்

நாங்கள் பாடங்களை இரசாயனவியல், பௌதிகவியல், புவியியல், உயிரியல் என்று தனித்தனியாகப் பிரித்துப் படிப்பதால் பூமியை அதன் முழுமையான பரிமாணத்தில் புரிந்துகொள்ளத் தவறிவருகிறோம்.

2

நமது பாடங்கள் காற்றைப்பற்றியும், கடல்நீரைப் பற்றியும், பூமியின் உள்ளே கொதிக்கும் கற்குளம்பைப் பற்றியும், தாவரங்கள் விலங்குகள் பற்றியும் தனித்தனியாகப் போதிப்பதால் பூமியை உயிரற்ற ஒரு பிண்டமாகவே கருதுகிறோம். அல்லது, உயிரினங்கள் வாழ்வதால் உயிர்க்கிரகம் என்று சொல்கிறோம். ஆனால் பூமியே தனித்த ஒரு பேருயிர்தான். இதைப் புரிந்து கொண்டு சுற்றுச்சூழலைப் பாதுகாக்கப் பாடநூல்களையும் தாண்டிய புதிய சிந்தனை அவசியம் என்று வடமாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

1

கிளிநொச்சி புனித திரேசா மகளிர் கல்லூரியில் நேற்று புதன்கிழமை (11-06-2014) வடமாகாண சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்கப்பட்டது. கல்லூரி அதிபர் ஜெயந்தி தனபாலசிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பொ.ஐங்கரநேசன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் தனது உரையில் மேலும்,

நாம் எமது உடல் வெப்பநிலையை மாறாது சீராக வைத்திருக்கிறோம். எமது இரத்தத்தில் குளுக்கோசின் செறிவை மாறாது பேணிவருகிறோம். இவ்வாறு எமது உடற்தொழிற்பாடுகள் சமநிலையில் இயங்கிவருவதால்தான் நாங்கள் எங்களை உயிர் என்கிறோம். எங்களைப் போன்றே பூமியும் தனது மேற்பரப்பின் வெப்பநிலையை மாறாது பேணிவருகிறது. காற்றில் கரியமிலவாயுவின் செறிவை, கடல் நீரில் உப்பின் செறிவையெல்லாம் கூடவோ குறையவோ விடாது பேணிவருகிறது.

இவ்வாறு தன்னைச் சமநிலையில் வைத்திருக்கும் எண்ணற்ற செயற்பாடுகளில் பூமி இடைவிடாது இயங்கிக்கொண்டிருப்பதால் பூமியை ஒரு பேருயிராகக் கருதும் புதிய சூழலியற் சிந்தனைப் போக்கு வளர ஆரம்பித்திருக்கிறது. இதன் அடிப்படையில் மேற்கின் தத்துவவியலாளர்கள் பூமியை கயா என்ற கிரேக்கப் பெண் தெய்வத்தின் பெயரால் அழைக்கத் தொடங்கியுள்ளனர். நமது தமிழ் மரபும் பூமியைப் பூமாதேவி, புவியன்னை என்று அழைப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

பூமி என்ற பேருயிரில் குடியிருக்கின்ற எங்களுக்கும் பூமிக்கும் இடையிலான உறவு பன்னெடுங்காலமாகப் பரஸ்பரம் கொடுத்து வாங்கும் உறவு முறையாகவே இருந்தது. எங்களுக்கும் எங்களது உணவுக்குழாயில் குடித்தனம் செய்யும் இ.கோலி பக்ரீறியங்களுக்கும் இடையில் இருக்கும் ஒன்றுக்கொன்று நன்மை செய்யும் ஒன்றியவாழி உறவைப் போன்றே நீடித்தது. ஆனால் நாம் இன்று பில்லியன் கணக்கில் பல்கிப் பெருகி, நுகர்வு வெறி தலைக்கேறிப் பூமியின் இழையங்களைச் சிதைக்கும் ஒட்டுண்ணிகளாகவல்லவா மாறிவிட்டிருக்கிறோம்.

எங்களில் தொற்றி ஒட்டுண்ணிகளாக வாழ முயற்சிக்கின்ற கிருமிகளை எமது உடலின் நோய் எதிர்ப்புப் பொறி முறை தாக்கி அழிக்கின்றது. அதே போன்றே, பூமி என்னும் பேருயிரும் தன்னைத் தற்காத்துக் கொள்வதற்காக ஒட்டுண்ணிகளாக மாறிவிட்டிருக்கும் எங்களை அழிப்பது தவிர்க்க முடியாதது. இப்போது அடிக்கடி அரங்கேறிவரும் இயற்கை அனர்த்தங்கள் எல்லாம் எங்களை அழிப்பற்கான அல்லது சனத்தொகையைக் கட்டுப்படுத்துவதற்கான பூமியின் தற்காப்புப் பொறிமுறைகள்தான்.

நாங்கள் மீளவும் பூமியுடன் கொடுத்துவாங்கும் உறவு முறைக்குத் திரும்புவதே எங்களையும் அழிவில் இருந்து காப்பாற்றி, பூமியையும் காப்பாற்றுவதற்கான ஒரே வழிமுறையாகும் என்றும் தெரிவித்தார்.

நிகழ்ச்சியின் முடிவில் பாடசாலை வளாகத்தில் மரக்கன்றுகளை நடுகை செய்யும் வைபவமும் இடம்பெற்றது.

7

8

Related Posts