சுயாதீன ஊடகவியலாளர் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்!

jaffna_attack_mautharanசுயாதீன ஊடகவியலாளர் மீது வெள்ளை வாகனத்தில் வந்த இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில் சி.மயூதரன் (வயது26) ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் அவரை காப்பாற்ற முயன்ற நண்பர் சி.சிவதாஸ் (வயது28) என்ற இளைஞர் படுகாயமடைந்த நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று மாலை 5.30மணியளவில் திருநெல்வேலி பகுதியில் இடம்பெற்றுள்ளது. திருநெல்வேலி கலாசாலை வீதி பகுதியில் குறித்த ஊடகவியலாளர் தனது நண்பருடன் பேசிக் கொண்டிருந்துள்ளார்.

இதன்போது மிகவேகமாக வந்த வெள்ளை வாகனம் இவர்களருகில் நிறுத்தியுள்ளது. இதன் பின்னர் அதிலிருந்து இறங்கிய 5பேர் ஊடகவியலாளரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதற்கிடையில் ஊடகவியலாளரின் நண்பர் எதற்காக பிரச்சினையில் ஈடுபடுகிறீர்கள் என்றவாறே தடுக்க முற்பட்ட சமயம் இரும்புச் சட்டத்தினல் நண்பரையும் கடுமையாக தாக்கியுள்ளனர்.

இதில் நண்பர் தலையில் படுகாயமடைந்துள்ளார். இதனையடுத்து இவர்கள் இருவரும் கூச்சலிட்டதை தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் கொடுத்ததுடன், வாகனத்தையும் அதில் வந்தவர்களையும் மடக்கிப் பிடித்து வாகனத்தின் சாவியையும் எடுத்துக் கொண்டனர்.

அதற்குள் அந்த இடத்தை சுற்றிவளைத்த பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய 5 பேரை கைது செய்துள்ளனர்.

இவர்கள் ஏற்கனவே பல கிருமினல் குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் என தெரிவித்துள்ள பொலிஸார் ஊடகவியலாளரின் தங்க ஆபரணத்தை கொள்ளையிட முயன்றமை மற்றும் ஊடகவியலாளரை தாக்கியமை போன்ற குற்றங்களை பதிவு செய்துள்ளனர்.

குறித்த ஊடகவியலாளர் யுத்தத்தின் பின்னரான குடாநாட்டில் பல இடர்பாடுகளுக்கும் மத்தியில் ஊடகப் பணியாற்றியதுடன், சமுக வலைத்தளம் ஊடாக அரசியல் சார்ந்த பல ஆக்கபூர்வமான விமர்சனங்களையும் எழுதிவந்தார்.

இந்நிலையில் இவர் மீதான தாக்குதல் குற்றவாளிகளைக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளமை சாதாரண பிரச்சனையாக காண்பித்து உள்நோக்கங்களை மறைப்பதற்காகச் செய்யப்பட்டுள்ளதாக யாழ்.ஊடக சமுகத்தினால் பார்க்கப்படுகின்றது.

Related Posts