சுயாதீனமாக பிரசாரம் செய்யமுடியாதுள்ளது: துவாரகேஸ்வரன்

thuvareswara-makesswaran-UNPமாகாண சபைத் தேர்தல் நீதியானதாகவும் சுயாதீனமானதாகவும் நடைபெறுவதற்கான சூழ்நிலையினை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்று கோரியுள்ள வட மாகாண சபைக்கான ஐக்கிய தேசியக் கட்சியின் முதன்மை வேட்பாளர் துவாரகேஸ்வரன் வடக்கில் சுயாதீனமாக பிரசார நடவடிக்கையை முன்னெடுக்கமுடியாதுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

வட மாகாண மக்களுக்கு ஜனநாயக நீரோட்டத்தில் கலந்துகொள்வதற்கான ஒரு நல்ல தருணமாகவே இந்த தேர்தல் அமைந்துள்ளது. ஆனால் அதனை முழுமையாக அனுபவிக்க முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டு விடக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வடக்கில் சட்டவிரோத ஆயுதங்களுடன் சிலர் அட்டகாசம் புரிந்து வருகிறார்கள். இதனால் வடக்கில் சில பகுதிகளுக்கு சென்று சுயாதீனமாக பிரசார நடவடிக்கைகைகளை மேற்கொள்ள முடியாது உள்ளது. மக்களும் அச்சத்தை எதிர்கொண்டுள்ளதுடன் பதற்றமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

மக்கள் தமது விருப்பத்தின் படி கட்சிகளுக்கு ஆதரவு தெரிவிக்கவும் கூட்டங்களில் கலந்து கொள்ளவும் குறிப்பாக கருத்துக்களை வெளியிடுவதற்கும் சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டும். இல்லையேல் அவர்களை முழுமையான ஜனநாயக நீரோட்டத்தக்குள் கொண்டு வருவது கடினமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சட்டவிரோத ஆயுதங்களைக் கலைவதுடன் தேர்தல் வன்முறைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக தேர்தல் திணைக்களம் மற்றும் பொலிஸ் திணைக்களம் ஆகியன உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

அதேபோன்று, வடக்கில் பல பகுதிகளில் பெருந்தொகையான இராணுவம் நிலைகொண்டிருப்பதால் தேர்தல் நெருங்கும் சமயத்தில் பாரிய மனித உரிமை மீறல்கள் இடம் பெறுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. எனவே அவ்வாறான ஒரு நிலைமை ஏற்படாத வகையில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts