Ad Widget

சுயலாபத்துக்காகவும் அரசியலுக்காகவும் வடபகுதியை அபிவிருத்தி செய்ய நந்திபோன்று தடையாக இருக்கிறது அரசு!

கொழும்பிலிருந்து ஹெலிகொப்டர்கள் மூலம் வருபவர்கள் சுயலாபத்துக்காகவும், தமது அரசியல் லாபத்துக்காகவும் செய்யும் சில்லறை – வேடிக்கைச் செயல்கள் எமது பிரதேச அபிவிருத்திக்கு உதவி விடாது. நாம் எடுக்கும் முயற்சிகளுக்கும் இவர்களே நந்திபோன்று தடையாக இருக்கின்றனர். இந்த நிலையில் தமிழ்பேசும் மக்களாகிய நாம் ஒன்றுசேர்ந்தால்தான் வடக்கு மாகாணத்தை அபிவிருத்தியடையச் செய்யலாம்.

vickneswaran-vicky-Cm

இவ்வாறு தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன். வடக்கு மாகாண மீன்பிடி ,போக்குவரத்து, கிராமிய அபிவிருத்தி மற்றும் வர்த்தக வாணிப அமைச்சின் பங்களிப்புடன் பருத்தித்துறை தும்பளை தெற்கு மாதர் கிராம அபிவிருத்திச் சங்க வளாகத்தில் பற்றிக் உற்பத்தி நிலையத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

தடைகளைத் தாண்டி முன்னேறவேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். வடக்கு மாகாணத்தில் பெரும் அபிவிருத்தி திட்டங்களை தாம் முன்னெடுக்கிறோம் என்று அரச தரப்பினர் கொக்கரிக்கின்றனர்.

அவர்கள் தமது பொக்கற்றுக்குள் இருந்து காசை எடுத்து எங்களுக்கு தரவில்லை. யாரோ செலவு செய்ய, யாரோ கட்டிமுடிக்க, அவற்றை திறந்துவைக்கவும் ஆரம்பித்துவைக்கவும் வருபவர்கள் “தாமே வடமாகாணத்துக்கு அது செய்தோம், இது செய்தோம்” என்று தம்பட்டமடிக்கின்றனர்.

அரசு நடுவில் நந்தி போல இருந்து தடைசெய்யாதிருக்குமானால், நாமே வெளிநாடுகளுடன் பேசி வடக்குமாகாண அபிவிருத்திக்கான உதவிகளைப் பெறுவோம்.

தமிழ் மக்களுக்கு ஏற்ற அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவோம். இதற்கு தடையாக இருப்பவர்கள் அரச தரப்பினர்தான். அதுமட்டுமல்ல, தமிழர்கள் எங்கு சென்றாலும் கடைசியில் தன்னிடம் வந்தாலேயே அரசியல் தீர்வு கிடைக்கும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கூறியிருக்கிறார்.

அவரிடம் எத்தனை தடவைகள் நாம் சென்றோம். 18 தடவைகள் பேசியிருக்கிறோம். தீர்வு கிடைத்ததா? 60 வருடங்களாக உள்நாட்டில் எடுக்கப்பட்ட எந்த முயற்சிகளும் கைகூடவில்லை. அரசு அவற்றை விரும்பவுமில்லை. இப்படியான சூழலில் தான் நாம் வெளிநாடுகளுக்கு சென்றோம்.

எமது மக்கள் பிரச்சினைகள் பற்றிப் பேசினோம். நாம் எமது மக்களது குறைகளை வெளிநாடுகளுக்கு கூறுவதை ஜனாதிபதி தடுக்கமுடியாது. வடக்கு மாகாண மக்களால் தெரிவுசெய்யப்பட்ட அமைச்சர்கள் இருக்கிறார்கள், உறுப்பினர்கள் இருக்கிறார்கள், அரசியல் தலைவர்கள் இருக்கிறார்கள், அமைச்சர் டெனீஸ்வரனின் முயற்சியில் இன்று இந்த பற்றிக் உற்பத்தி நிலையம் அமைக்கப்படுகிறது. அதுமட்டுமல்ல இந்த அமைச்சின் கீழ் நல்லூரில் கற்பூர உற்பத்தி நிலையம், நெடுந்தீவில் அரிசி அரைக்கும் ஆலை, தெல்லிப்பழையில் உணவு பதனிடும் நிலையம் ஆகியவற்றை நிறுவ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. எனவே நாம் ஒன்றிணைந்து வடக்கு மாகாண அபிவிருத்திக்காக பாடுபடுவோம். என்றார்.

இந்த நிகழ்வில், வடக்கு மாகாண அமைச்சர்களான பா.டெனீஸ்வரன், த.குருகுலராஜா, ப.சத்தியலிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், மாகாண சபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன், ச.சுகிர்தன், வி.சிவயோகன், கே.பரஞ்சோதி, வடக்கு மாகாண எதிர்க்கட்சித்தலைவர் எஸ்.தவராசா ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related Posts