எல்ல வெல்லவாய கரந்தகொல்ல பிரதேசத்திலுள்ள இராவண எல்ல கற்குகை ஒன்றினுள் சுயநினைவிழந்து காணப்படுவதாகக் கூறப்படும் இராவணனை நினைவு திரும்பச் செய்வதாகத் தெரிவித்து மொறட்டுவ பிரதேசத்திலுள்ள மந்திரவாதி பெண்ணொருவர் உட்பட 18 பேர் நேற்றுமுன்தினம் அக்குகையினுள் சென்றிருந்த போது தாக்குதலுக்கு உள்ளாகினர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
சம்பவ தினத்தன்று இக்குகையினுள் வழமைக்கு மாறாக ஏதாவது ஒரு சம்பவம் இடம்பெறுவதாக அப்பிரதேச மக்கள் மத்தியில் தகவல் பரவியதையடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு குழுமியிருந்ததனால் பாதுகாப்புக்காக பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர். எனினும் அவர்கள் இவ்வாறு குகைக்குள் செல்லவிருப்பதாக பொலிஸாருக்கு முன்னறிவித்தல் கொடுத்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இதற்கு முன்பதாகவும் இவ்வாறான மாந்தீரிகர்கள் சிலர் இக்குகையினை நோட்டமிட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.
இந்த மந்திரவாதிப் பெண் தான் கண்ட கனவினையடுத்து இக்குழுவினருடன் இங்கு வந்திருப்பதாகவும் சுயநினைவிழந்து குகையினுள் இருக்கும் இராவணனை உன்னால் மட்டுமே எழுப்ப முடியும் எனவும் ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு முன்னர் இராவணனை எழுப்பிவிட வேண்டும் எனவும் தனது கனவில் தோன்றிய இறைவன் தெரிவித்ததாக அப் பெண் கூறினார்.
மேலும் இப்பெண்ணுடன் குகைக்குள் சென்றிருப்பவர்கள் இராவணன் வம்சத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் அதனால் அவர்களை இவ்வாறு குகைக்குள் அழைத்துச் செல்வதாகவும் அப்பெண் தெரிவித்திருந்தார்.
இவ்வாறு குகைக்குள் சென்றவர்களுள் சித்த சுவாதீனமற்ற ஒருவரும் காணப்படுவதுடன் அவர் இராவணன் எல்ல பிரதேசத்துக்கு அருகிலுள்ள கரந்தகொல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவரென தெரியவந்துள்ளது. குறித்த பெண் மொறட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்தவரெனவும் ஏனையவர்கள் நாட்டின் வெவ்வேறு பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் கூறப்படுகிறது.
இப்பெண் உள்ளிட்ட குழுவினர் நேற்றுமுன்தினம் காலை 7.30 மணியளவில் குகைக்குள் சென்றுள்ளனர். இச்சந்தர்ப்பத்தில் பிரதேசவாசிகள் குகைக்கு அருகில் கூடியிருந்தமையினால் அவர்களைக் கட்டுப்படுத்துவதற்கு எல்ல பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
குகையினுள் சென்றிருந்த பெண் தெரிவிக்கையில் இராவணன் இக்குகைக்குள் இருந்தால் அவருக்கு உரிய சிகிச்சையளித்துவிட்டு இன்று வருவதாகத் தெரிவித்தார். இதேவேளை இக்குகையினுள் சுமார் 400 அடி பள்ளமொன்று காணப்படுவதோடு விசாலமான குளமொன்றும் காணப்படுவதாக அதற்குள் சென்ற பிரதேசவாசிகள் தெரிவித்ததோடு அதனைப் பார்வையிட வரும் உல்லாசப் பயணிகளிடம் தாம் பணத்தைப் பெற்றுக்கொண்டு அவர்களை குகையினுள் அழைத்துச் செல்வதாகவும் தெரிவித்தனர்.
இக்குழுவினரின் பயணம் தொடர்பில் பதுளை தொல்பொருளியல் ஆராய்ச்சியாளர் அலுவலகத்துக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து அவர்கள் இது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தனர்.
இதற்கிடையில் நேற்று முன்தினம் 6.15 மணியளவில் குகையிலிருந்து வெ ளியில் வந்திருந்த மந்திரவாதி பெண் உள்ளிட்ட குழுவினர் மீது சுமார் 500 இற்கும் அதிகமான பிரதேசவாசிகள் ஒன்றிணைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். எனினும் குறித்த பெண் மாற்றுவழியொன்றினூடாக அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார் எனத் தெரியவந்துள்ளது.