இராணுவத்தினர் இங்கு சும்மா தானே இருக்கின்றனர் எனவே அவர்களைக் கொண்டு, அவர்கள் அடைத்த வெள்ளவாய்க்கால்களையும்- கான்களையும் சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கலாம். இது தொடர்பில் அவர்களுடன் பேச வேண்டும் என்று தெரிவித்தார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன்.
வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் அமைச்சு மீதான விவாதம் நேற்று இடம்பெற்றது. இதன்போது இறுதியில் பதிலளித்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
விவாதத்தின் போது ஆளுங்கட்சி உறுப்பினர் க.விந்தன், யாழ்.நகரில் கடந்த காலங்களில் இராணுவத்தினர் சுற்றிவளைத்து முகாம்களை அமைத்திருந்தனர்.தமிழீழ விடுதலைப் புலிகள் கடலினால் வந்து, கால்வாய்கள் ஊடாக ஊடுருவித் தாக்குதல் நடத்துவார்கள் என்ற அச்சத்தின் காரணமாக, இராணுவத்தினர் கால்வாய்களை மூடிவிட்டனர். இதனாலேயே, யாழ்.நகரின் கழிவுநீர் வெளியேற்றம்- வெள்ளம் வடிந்தோடலில் பிரச்சினை என்பன ஏற்படுகின்றது என்று குறிப்பிட்டார்.
இதன்பின்னர், இறுதியில் பதிலளித்து உரையாற்றிய முதலமைச்சர், இராணுவத்தினர் போட்ட தடைகளை அவர்களைக் கொண்டே செய்விக்கலாம். அவர்கள் இங்கு சும்மாதானே இருந்து கொண்டிருக்கின்றனர் என்று குறிப்பிட்டார். அத்துடன் இது தொடர்பில் அவர்களுடன் பேச வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும், இராணுவத்தினர் இங்கு தொடர்ந்து நிலை கொண்டிருப்பதனாலேயே இங்கு குடியேற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன என்பதைச் சுட்டிக்காட்டிய முதலமைச்சர், இதனை இன்றைய தினம் ( நேற்று) தன்னைச் சந்தித்த கனேடிய தூதுவரிடமும் சுட்டிக்காட்டிய தெரிவித்தார்.
அரசுடன் இணைந்து செயற்படலாம் தானே என்று கனேடியத் தூதுவர் தன்னிடம் கேள்வி எழுப்பியதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டார். வெளிநாடுகள் பல எங்களின் குறைகளைக் கண்டுகொள்கின்றார்கள் இல்லை. அவர்கள் மத்திய- கொழும்பு அரசிற்காகவே பரிந்து பேசுகின்றார்கள் என்றார் முதலமைச்சர்