உலக வங்கியின் சுமார் 500 மில்லியன் ரூபாய் நிதி உதவியில், சாவகச்சேரி நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படவிருப்பதாக, சாவகச்சேரி நகரசபைச் செயலாளர் க.சண்முகதாசன் தெரிவித்தார்.
தென்மராட்சி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், நேற்று முன்தினம் (12) இடம்பெற்ற போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“உலக வங்கியால் சாவகச்சேரி நகர அபிவிருத்திக்கு சுமார் 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கான முன்மொழிவுகளை நாம் சமர்ப்பித்துள்ளோம்.
“இந்நிதியில் இருந்து விளையாட்டு மைதான அரங்கு உள்ளிட்ட மைதானப் புனரமைப்பு, சந்தை உட்கட்டமைப்பு, சிறுவர் பூங்கா அமைப்பதுக்கான காணி கொள்வனவு, சிறுவர் பூங்கா, வீதிச் சமிக்ஞை விளக்கு, கழிவகற்றல் செயற்றிட்டம், சங்கத்தானை இந்துக் கல்லூரிக்கு முன்பாக பாதசாரிகள் கடப்பதுக்கான மேம்பாலம் அமைத்தல் போன்ற திட்டங்கள் குறித்த நிதியில் இருந்து மேற்கொள்வதுக்காக முன்மொழியப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது” என்றார்.