சுமனரத்ன தேரருக்கு எதிராக வட மாகாண சபையில் கண்டனப் பிரேரணை நிறைவேற்றம்

வடக்கு. கிழக்கு மாகாணங்களில் அத்துமீறி பெளத்த விகாரைகள் அமைக்கப்படுகின்றமை மற்றும் மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் இன துவேசமாக நடந்து கொண்டமை தொடர்பாக இன்றைய தினம் வட மாகாண சபையில் கண்டனம் தெரிவித்து, தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானத்திற்கு வட மாகாண சபை அமர்வில் பிரசன்னமாகியிருந்த சிங்கள மாகாண சபை உறுப்பினர்களால் எதிர்ப்பு வெளியிடப்பட்டதுடன், இந்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்த தமிழ் மாகாண சபை உறுப்பினர்களையும் கருத்துக்கள் தெரிவிக்கவிடாது இடையூறு ஏற்படுத்தினர்.

வட மாகாண சபையின் 66 ஆவது அமர்வு இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணம் – கைதடியில் அமைந்துள்ள மாகாணசபை கட்டடத்தில் இடம்பெற்றது.

இதன்போதே, வடக்கு கிழக்கு மாகாணங்களில் அத்துமீறிய விகாரை நிர்மாணம் மற்றும் அம்பிட்டிய சுமனரத்ன தேரர் இனத்துவேசமாக நடந்துகொண்டமை தொடர்பான விடயத்தை அவைத் தலைவர் சீ.வி கே.சிவஞானம் முக்கிய பிரேரணையாக எடுத்துக் கொண்டார்.

அத்துடன் இந்த விடயத்தை ஐனாதிபதி, பிரதமர், பொலிஸ்மா அதிபர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டுவரவும் வடக்கு மாகாண சபை, தீர்மானித்துள்ளது.

சபையில் கருத்து தெரிவித்த மாகணசபை உறுப்பினர் கேசவன் சயந்தன், சட்டத்திற்கு முரணான வகையில் அமைக்கப்படும் கட்டடங்களை இடித்து அழிக்கும் அதிகாரம் மாகாண உள்ளூராட்சி அமைச்சுக்கு உள்ளது என சுட்டிக்காட்டியதுடன், இந்த விடயம் தொடர்பாக உள்ளூராட்சி அமைச்சு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

இதேவேளை இந்த விடயம் தொடர்பில் மாகாணசபை உறுப்பினர் எம். கே.சிவாஜிலிங்கம் சட்டத்திற்கு முரணான வகையில் பெளத்த விகாரை அமைக்கப்படுகின்றமை தொடர்பாவோ அல்லது, காணி அபகரிப்பு தொடர்பாகவோ மாகாணசபை எந்தவொரு சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லையென சபையில் தனது கருத்தை முன்வைத்தார்.

இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் பௌத்த விகாரைகள் அமைக்கப்படுகின்றமை மற்றும் பௌத்த பிக்கு விவகாரம் தொடர்பாக கிழக்கு மாகாணசபை நடவடிக்கை எடுக்காத நிலையில், வட மாகாணசபை எதற்காக பிரேரணை கொண்டுவரவேண்டும் என்ற கேள்வி மாகாணசபை உறுப்பினர் ஜெயதிலக்கவினால் அவைத் தலைவர் சீ.வி கே.சிவஞானத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது.

Related Posts