சுமந்திரன், சேனாதிராஜா உள்ளிட்ட 6 தலைவர்களும் வெறும் பார்வையாளர்களாகவே காணப்பட்டனர் – செல்வராஜா கஜேந்திரன்

மக்கள் தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் பிரதிநிதிகளை தெரிவு செய்த போதிலும் அவர்கள் இதுவரை காலமும் வெறும் பார்வையாளர்களாக மாத்திரமே செயற்பட்டு வருகின்றனர் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் பிரசார கூட்டம் நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) கிளிநொச்சியில் இடம்பெற்றது. அதன்போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

மக்கள் தெரிவு செய்த தலைவர்கள் எவரும் ஐ.நா மன்றத்தில் உரையாற்றவில்லை. நாடுகள் கூடியிருந்த அந்த மாநாட்டில் யாரும் உரையாற்றவில்லை என சுட்டிக்காட்டிய அவர், மாநாட்டில் தாம் உரையாற்றுகையில் த.தே. கூட்டமைப்பின் வருங்கால தலைவர் எனப்படும் சுமந்திரன், சேனாதிராஜா உள்ளிட்ட 6 தலைவர்களும் வெறும் பார்வையாளர்களாகவே காணப்பட்டனர். நாட்டில் இடம்பெற்ற இன படுகொலைக்கு ஒரு சர்வதேச விசாரணை வேண்டும் எனவேனும் எவரும் உரையாற்றவில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

மேலும், தென்னிலங்கை மீனவர்கள் கடற்படையினருடைய உதவியுடன் தமிழர் பிரதேசங்களில் அத்துமீறி வருகின்றனர். அது மஹிந்த அரசின் திட்டமிட்ட இன அழிப்பின் செயற்பாடு. அதற்கு மாகாண கடற்தொழில் அமைச்சும் மௌனம் காத்தது எனவும் அவர் குற்றம் சாட்டினார்.

Related Posts