தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரனைக் கொலை செய்ய முயற்சித்ததாக தெரிவித்து கைது செய்யப்பட்ட இளைஞர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
கொலைப்பழி சுமத்தி கைது செய்யப்பட்ட ஐந்து இளைஞர்களையும் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இளைஞர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள சுமந்தின் கொலை முயற்சி தொடர்பான விசாரணைகள் முடிவடைந்து, அறிக்கை சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், இளைஞர்களை யாழ். சிறைச்சாலைக்கு மாற்றுமாறும் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில், சந்தேகநபர்களுக்கு தொடர்ந்தும் அச்சுறுத்தல் இருப்பதனால் ஏனைய கைதிகளுடன் சேர்க்காமல் தனியாக வைத்திருக்குமாறும், வேறு சிறைச்சாலைக்கு மாற்றவேண்டாம் எனவும் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் கொழும்புத் தலைமை அலுவலகத்தால் நீதிமன்றத்துக்கு கடிதம்மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாவும் நீதிவான் தெரிவித்துள்ளார்.
இதேவேளை சுமந்திரனை கொலை செய்ய முயன்றதாக கைதுசெய்யப்பட்ட இளைஞர்களின் உறவுகள் இது அப்பட்டமான அரசியல் பழிவாங்கல் எனத் தெரிவித்திருப்பதுடன் அரசாங்கத்தின் பங்காளிகளாக எதிர்தரப்பினர் இருப்பதால் இவ்விடயத்தில் நீதிகிடைப்பது சந்தேகம் எனக்குறிப்பிட்டனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்களுக்கு விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு வழங்கிவருவதும் கடந்த காலங்களில் இப்படியான உயர்பாதுகாப்பு டக்ளஸ் தேவானந்தா போன்றவர்களுக்கு வழங்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.