இந்திய மீனவர்களின் இழுவைப் படகுகளை இலங்கைக் கடற்பரப்பில் கட்டுப்படுத்துவது தொடர்பாக நாடாளுமன்றில் தான் முன்வைத்துள்ள பிரேரணைக்கு வடக்கு மாகாண சபையின் அங்கீகாரத்தைப் பெறுவதற்காக அதன் உறுப்பினர்களை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நேற்று செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார்.
குறித்த விடயத்தை தனிநபர் சட்டமூலமாகக் கொண்டுவந்த அவரின் பிரேரணைக்கு மாகாண சபைகளின் கருத்துக்களை நாடாளுமன்றம் கோரியது. வடக்கு மாகாண சபையின் கருத்தைத் தெரிவிப்பதற்காக கடந்த 10ஆம் திகதி பேரவை செயலகத்தில் விசேட அமர்வு ஒன்று நடத்தப்பட்டது.
ஆதில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை சந்தித்துப் பேசிய பின் முடிவு எடுக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதற்கான சந்திப்பே நேற்றய தினம் யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் இடம்பெற்றது.
இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த சுமந்திரன் எம்.பி –
”எமது மீனவர்களின் வாழ்வாதாரப் பாதுகாப்பு, கடல் அடித்தளத்தை பாதிக்காத தொழில் முறை கையாள்கை, இந்திய மீனவர்களின் இழுவைப் படகுகளை கட்டுப்படுத்தல் தொடர்பில் பேசினோம். நாடாளுமன்றில் தனிநபர் சட்டமூலமாக இதனை முன்வைத்து மாகாண சபையின் அங்கீகாரத்தைப் பெற கேட்டிருந்தேன். வட மாகாணசபையினர் என்னுடன் பேசி முடிவெடுப்பதாகக் கூறினர். இதற்கமையவே இன்றைய பேச்சு இடம்பெற்றது” – என்றார்.
இந்த சந்திப்புக் குறித்து வட மாகாண சபை அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் கூறுகையில் –
சட்டமூலம் தொடர்பில் மாகாணசபை உறுப்பினர்களின் கருத்துக்கள் சுமந்திரன் எம்.பிக்கு வழங்கப்பட்டது. இதற்கமைய வரும் 29 ஆம் திகதி வடக்கு மாகாண சபை விசேட அமர்வை நடத்தும். இதன் பின்னர் சட்டமூலம் குறித்து சபையின் கருத்து நாடாளுமன்றுக்கு அனுப்பி வைக்கப்படும் – என்றார்.