சுபாஷ் சந்திர போஸ் குறித்த ரகசிய ஆவணங்களை வெளியிட்டது மேற்கு வங்கம்

சுபாஷ் சந்திரபோஸ் குறித்த 64 ரகசிய ஆவணங்களை மேற்குவங்க அரசு வெளியிட்டிருக்கிறது. இதுவரை கொல்கத்தா காவல்துறை வசமிருந்த இந்த ஆவணங்கள் விரைவில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும். இருந்தபோதும், அந்த ஆவணங்களில் என்ன இருக்கின்றன என்பது இதுவரை தெளிவாகவில்லை.

subas-santhera-boss

இந்தியாவிலிருந்து பிரிட்டிஷாரை வெளியேற்றி தனியாக ராணுவமொன்றை நிறுவிய சுபாஷ் சந்திரபோஸை நேச நாட்டுப் படைகள் தேடிவந்தன.

அவரது மரணம் குறித்து இந்தியாவில் பல்வேறு கதைகள் உலவிவருகின்றன.

இவைதவிர, சுபாஷ் சந்திர போஸ் குறித்து வேறு எத்தனை ரகசிய ஆவணங்கள் இந்திய அரசின் வசம் இருக்கின்றன என்பது தெரியவில்லை.

1945ஆம் ஆண்டில் சுபாஷ் சந்திர போஸ் ஒரு விமான விபத்தில் இறந்தார் என்பதை இந்தியாவில் பலர் ஏற்றுக்கொள்வதில்லை.

அவரது உடல் தைவானில் எரிக்கப்பட்டதாக சொல்லப்பட்டாலும், உடலின் புகைப்படம் ஏதும் இதுவரை வெளியிடப்பட்டதில்லை.

சைபீரியாவில் உள்ள ரஷ்ய சிறையில் இருக்கிறார் என்றும் இந்தியாவில் ஒரு சாமியாரைப் போல வசித்தார் என்றும் பல கருத்துக்கள் தற்போதும் இந்தியாவில் வலம்வருகின்றன.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, அமெரிக்க – பிரிட்டிஷ் படையினரால் பிடிக்கப்படுவதைத் தடுக்கவே தான் இறந்ததாக போலியான கருத்தை போஸ் உருவாக்கினார் என சுபாஷ் சந்திர போஸ் குறித்து India’s Biggest Cover Up என்ற புத்தத்தை எழுதிய அனுஜ் தர் குறிப்பிடுகிறார்.

தற்போது வெளியிடப்பட்டிருக்கும் ஆவணங்களில் போஸின் மரணம் குறித்து ஏதேனும் தகவல்கள் இருக்கிறதா என்பது இதுவரை தெளிவாகவில்லை.

புது தில்லியில் இருக்கும் ஆவணங்களோடு ஒப்பிட்டால் கொல்கத்தாவில் இருக்கும் ஆவணங்கள் அவ்வளவு முக்கியமானவையல்ல என்கிறார்கள் சில நிபுணர்கள்.

பாரதீய ஜனதாக் கட்சி எதிர்க்கட்சியாக இருந்தபோது, சுபாஸ் சந்திர போஸ் குறித்து மத்திய அரசின் வசம் இருக்கும் 39 ரகசிய ஆவணங்களை வெளியிட வேண்டும் என வலியுறுத்தியது.

ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு அந்த ஆவணங்களை பா.ஜ.க. அரசு இதுவரை வெளியிடவில்லை.

சுபாஷ் சந்திர போஸ் குறித்த ஆவணங்களை வெளியிட முடியாது என்றும் வெளியிட்டால் அது பிற நாடுகளுடனான உறவைப் பாதிக்கும் என்றும் பிரதமர் அலுவலக வட்டாரங்கள் கூறியதாக நாளிதழ் ஒன்று தெரிவிக்கிறது.

மேற்கு வங்க அரசு தற்போது ஆவணங்களை வெளியிட்டிருப்பது குறித்து மத்திய அரசு இதுவரை கருத்து எதையும் வெளியிடவில்லை.

Related Posts