சுன்னாம் நிலத்தடி நீர் தொடர்பில் ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட குழு ஆய்வு செய்யவில்லை என எதிர்க்கட்சி தலைவர் குற்றசாட்டு

வடமாகாண விவசாய அமைச்சினால் உருவாக்கப்பட்ட நிபுணர் குழு சுன்னாகம் நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் கலந்து உள்ளதா என்பதனை ஆய்வு செய்வதனை விடுத்து , மற்றைய குழுக்களின் ஆய்வு அறிக்கைகளில் தவறு கண்டு பிடித்துள்ளார்கள். என வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா குற்றம் சாட்டியுள்ளார்.

வடமாகாண சபையில் நேற்றயதினம் வடமாகாணத்தில் உள்ள நீர் பிரச்சனை தொடர்பில் விவாதிப்பதற்கான விசேட அமர்வு நடைபெற்றது. அதன் போதே எதிர்க்கட்சி தலைவர் அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் ,

வடமாகாண விவசாய அமைச்சினால் சுன்னாகம் நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் கலந்தமை தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்ள என நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவை நியமிக்கும் அதிகாரம் விவசாய அமைச்சருக்கு இல்லை. அவ்வாறன நிலையில் தனது அதிகார வரம்பை மீறி குறித்த நிபுணர் குழுவை விவசாய அமைச்சர் உருவாக்கி இருந்தார்.

நிபுணர் குழு நியமிக்கப்பட்டு மூன்று மாத காலத்திற்குள் நீரில் BTEX இல்லை. என கூறினார்கள். BTEX பெற்றோலில் தான் இருக்கும் ஒயிலில் இருக்காது.

ஐந்து மாதங்களில் ஏற்கனவே தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு நீரில் கழிவு எண்ணெய் இருக்கின்றது என வெளிவந்த அறிக்கை பிழை என இன்னோர் அறிக்கை வெளியிட்டார்கள்.

தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அறிக்கையில் விடப்பட்ட தவறு ஒன்றினை சுட்டிக்காட்டி , அந்த தவறு உள்ளமையால் இந்த அறிக்கை பிழை என்றார்கள்.

குறித்த தவறு தொடர்பில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையிடம் எழுத்து மூலம் எதனையும் கேட்கவில்லை. குறித்த தவறு தொடர்பில் விளக்கம் கேட்டு இருக்க வேண்டும் அதனை கேட்காது அந்த தவறை சுட்டிக்காட்டி முழு அறிக்கையும் பிழை என தெரிவித்தார்கள்.

அவுஸ்ரேலியா நிபுணர் குழு அறிக்கை என ஒரு அறிக்கையை சுட்டிகாட்டி அந்த அறிக்கையில் நீரில் கழிவு எண்ணெய் கலக்கவில்லை என குறிப்பிட்டு அதனால் நீரில் கழிவு எண்ணெய் இல்லை என தெரிவித்து உள்ளனர்.

குறித்த அவுஸ்ரேலியா நிபுணர் 12 கிணறுகளில் நீர் மாதிரி எடுத்தே ஆய்வு செய்து அதில் கழிவு எண்ணெய் இல்லை என தெரிவித்து இருந்தனர். அதேவேளை தாம் 12 கிணறுகளில் தான் நீர் மாதிரிகள் எடுத்து ஆய்வு செய்தோம் அதில் தான் கழிவு எண்ணெய் இல்லை என தெளிவாக குறிபிட்டு இருந்தனர். அதனை விடுத்து வடமாகாண விவசாய அமைச்சின் நிபுணர் குழு அந்த அறிக்கையை காட்டி நீரில் கழிவு எண்ணெய் இல்லை என தெரிவித்து உள்ளனர்.

இலங்கை தர நிர்ணய சபை 0.2 மில்லி கிராம் நீரில் கலந்து இருந்தால் பாதிப்பு இல்லை என அறிவித்து உள்ளது. இதேவேளை மத்திய சுகாதார அமைச்சு 2 மில்லிகிராம் வரை நீரில் கலந்து இருக்கலாம் என அறிவித்து இருந்தது. அதனை சுட்டிக்காட்டி நீரில் 2 மில்லிகிராம் கழிவு எண்ணெய் கலந்து இருக்கலாம் என நிபுணர் குழு தெரிவித்தது.
அந்நிலையில் கடந்த மாதம் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது மத்திய சுகாதார அமைச்சு , இலங்கை தர நிர்ணய சபையின் அளவான 0.2 அளவு எண்ணெய் நீரில் கலந்து இருக்கலாம் என்பதே சரி என தெரிவித்து உள்ளது.

அதேவேளை நிபுணர் ஆய்வுக்கு பயன்படுத்திய இயந்திரம் பெட்ரோல் தாங்கிகளில் வெடிப்பு ஏற்பட்டால் அதனை பரிசோதிக்கவும் , மசகு எண்ணெய் குழாய்களில் வெடிப்பு ஏற்பாட்டால் அதை பரிசோதிக்கவும் பயன்படுத்தும் இயந்திரம் . அந்த இயந்திரம் ஊடாக நீரில் கலக்கபப்ட்ட கழிவு எண்ணெயின் அளவினை கணக்கிட முடியாது
இவ்வாறான நிலையில் வடமாகாண விவசாய அமைச்சினால் உருவாக்கபட்ட நிபுணர் குழு யாரை காப்பாற்றும் நோக்குடன் உருவாக்கப்பட்டது என்பது தெரியவில்லை என மேலும் தெரிவித்து இருந்தார்.

நேற்றய தினம் நடைபெற்ற குறித்த விசேட அமர்வில் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா ஒரு மணித்தியாலம் 30 நிமிடங்களுக்கு மேல் குறித்த நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பில் கடும் விமர்சனங்களை முன் வைத்து உரையாற்றினார்.

அதன் போது ஒரு கட்டத்தில் குறுக்கிட்ட ஆளும் கட்சி உறுப்பினர் அஸ்மீன் இந்த அமர்வு வடமாகாணத்தில் உள்ள நீர் பிரச்சனை தொடர்பில் விவாதிப்பதற்கான அமர்வு இதில் தனியே சுன்னாக நீர்பிரச்னை தொடர்பில் நீண்ட உரையாற்றுவதற்கு எதிர்கட்சி தலைவருக்கு சந்தர்ப்பம் வழங்கபடுகின்றது என சுட்டிக்காட்டினார்.

அதற்கு பதிலளித்த அவைத்தலைவர் ‘அவரின் உரை தொடரட்டும் நீங்கள் கருத்து சொல்லவும் சந்தர்ப்பம் வழங்கப்படும் என தெரிவித்தார்.

Related Posts