சுன்னாக பொலிஸாரினால் சிறிஸ்கந்தராசா சுமணன் என்ற இளைஞர் சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்தமை தொடர்பான வழக்கில் அப்போதைய சுன்னாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிந்தக்க பண்டார உள்ளிட்ட 6 பொலிஸாரை குற்றவாளியாக கண்ட யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீரப்பளித்துள்ளார்.
அதேவேளை குறித்த வழக்கின் 3 ஆவது எதிரியான தேவதயாளன் மற்றும் 8 ஆம் எதிரியான லலித் ஆகியோர் குற்றமற்றவர்கள் என மேல் நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். குறித்த வழக்கு நேற்றய தினம் யாழ். மேல் நீதிமன்றில் நீதிபதி மா.இளஞ்செழியன் முன்பாக எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதிபதி அவ்வாறு தீர்ப்பளித்தார்.
சுமணனை தொங்கவிட்டு கால்களிலும் பிட்டத்திலும் தாக்கியதாக கூறப்பட்ட நிலையில் இவற்றில் கண்டல் காயங்கள் உள்ளதை மருத்துவ அறிக்கை உறுதி செய்துள்ளது. அத்துடன் இக் காயங்கள் மொட்டையான ஆயுதத்தால் ஏற்படுத்தப்பட்டிருக்கலாம் என்பதையும் உறுதி செய்கின்றது. என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தீர்ப்பின் போது தெரிவித்தார்.
நீதிபதி மேலும் தெரிவிக்கையில் ,
குறித்த வழக்கில் முக்கிய சாட்சியாக இரண்டு சிவிலியன் சாட்சிகளும், பிரேத பரிசோதனை அறிக்கைகளும் காணப்பட்டதுடன், எனைய பொலிஸ் சாட்சியங்களும் பொலிஸ் பதிவேட்டை அடிப்படையாக கொண்டு அமைந்ததுடன் குற்றப் புலனாய்வு பிரிவின் சாட்சியமும் காணப்பட்டது.
இதன்படி இவ் வழக்கின் முக்கிய சாட்சியாக உள்ள சுமணண் என்பவருடன் சேர்த்து கைது செய்யப்பட்டு அடைத்து வைக்கப்பட்டிருந்த சுரேஸ் எவ்வாறு தனக்கும், சுமணணன் என்பவருக்கும் தாக்குதல் நடாத்தப்பட்டன என சாட்சியமளித்ததுடன் அது தொடர்பாக மன்றில் செய்தும் காட்டியிருந்தார். அதேபோன்று இரண்டாவதான சிவிலியன் சாட்சியான லோகேஸ்வரனும் சுமணண் என்பவரை பொலிஸார் கைது செய்து வரும் போது அவரது நெற்றியால் இரத்தம் வழிந்துகொண்டிருந்ததை கண்டதாக சாட்சியமளித்திருந்தார். இவற்றை மருத்துவருடயை பிரேத பரிசோதனை அறிக்கை ஒப்புறுதி செய்வதாக உள்ளது. ஏனெனில், குறித்த சுமணணன் என்பவரது உடலில் 16உட் காயங்களும், 6 வெளிக்காயங்களும் காணப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அத்துடன் சுரேஸ் என்பவரது சாட்சியத்தின் பிரகாரம் சுமணனை தொங்கவிட்டு கால்களிலும் பிட்டத்திலும் தாக்கியதாக கூறப்பட்ட நிலையில் இவற்றில் கண்டல் காயங்கள் உள்ளதை மருத்துவ அறிக்கை உறுதி செய்துள்ளது. அத்துடன் இக் காயங்கள் மொட்டையான ஆயுதத்தால் ஏற்படுத்தப்பட்டிருக்கலாம் என்பதையும் உறுதி செய்கின்றது. மேலும் பிரதி சொலிஸ்ர ஜெனறல் குமார்ரட்டணத்தால் சமர்பிக்கப்பட்ட வ1இருந்து வ10இஆ பிரிவு சாட்சியங்களும் ஆவணங்களும் குறித்த சிந்தக்கபண்டார பொலிஸ் அதிகாரி உட்பட எனைய ஜந்து பொலிஸ் அதிகாரிகளது பொறுப்பிலேயே சிறிகந்தராசா சுமணண் 25.11.2011 அன்றில் இருந்து 26.11.2011 அன்று பிற்பகல் அவரது சடலம் கண்டுபிடிக்கும் வரை இருந்தார் என்பது நிருபணமாகின்றது.
அத்துடன் குறுக்கு விசாரனையின் போது குறித்த இறந்த நபரது உடலில் காணப்பட்ட காயங்கள் எக் காலத்திற்கு உரியவை என எதிரி தரப்பு சட்டத்தரணியால் சட்ட வைத்திய அதிகாரியிடம் கேட்க்கப்பட்ட போது, சட்ட வைத்திய அதிகாரி அவை புதிய காயங்கள் எனவும் இரண்டு தினங்களுக்குள் ஏற்பட்டதாக காயங்கள் எனவும் சாட்சியமளித்திருந்தார். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிந்தக்க பண்டார, சுமணணன் என்பவரை 25.11.2011 அன்று இரவு விசாரனைக்காக தடுப்பு சிறையில் இருந்து வெளியில் எடுத்தமையும், அதன்பின்னர் மறுநாள் காலை வட்டக்கச்சிக்கு விசாரனைக்காக அழைத்து சென்றமையும் அவர் தப்பிச் சென்று குளத்தில் மரணமான நிலையில் மீட்டதையும் தனது கூண்டு வாக்கு மூலத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.
அதேபோன்று எனைய நான்கு பொலிஸ் உத்தியோகத்தரில் 4ஆம் 5ஆம் 6ஆம் பொலிஸ் உத்தியோகத்தர்களை தவிர மற்றைய நபரும் தனது கூண்டு வாக்கு மூலத்தில் தமது செயற்பாட்டை கூறியுள்ளார். எனைய மூன்று 4ஆம், 5ஆம், 6ஆம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கூண்டு வாக்கு மூலத்தில் எதுவும் கூறவில்லை. இங்கு கூண்டு வாக்கு மூலம் அளித்த சிந்தக்கபண்டார மற்றும் இரண்டாவது எதிரி மயூரன் சித்திரவதை செய்தமை தொடர்பாக மறுத்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் சித்திரவதை செய்யாமையின் நம்பகத்தன்மை தொடர்பில் மன்று ஆராய்ந்த போது சாட்சியங்களின் அடிப்படையில் அதனை இவர்களது மறுப்பை மன்று ஏற்றுக்கொள்ளவில்லை.
எனவே இவ் வழக்கில் எதிரிகளான பொலிஸ் உத்தியோகத்தர்கள் 1ஆம், 2ஆம், 4ஆம், 5ஆம், 6ஆம், 7ஆம் ஆகியோர் குற்றவாளிகளாக பிரதி சொலிஸ்ர ஜெனறல் நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் சாட்சிகள் ஊடாக நிரூபித்துள்ளார். மேலும் இவ் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மூன்றாவது மற்றும் எட்டாவது பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிரான குற்றத்தை அரச தரப்பானது நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் நிரூபிக்கப்படவில்லை. அதனால் இவ் வழக்கின் மூன்றாவது எதிரியான தேவதயாளன், மற்றும் எட்டாவது எதிரியான பொலிஸ் வாகன சாரதி லலித் ஆகியோர் வழக்கில் இருந்து விடுவிக்கபப்டுகின்றனர். என தெரிவித்தார்.