Ad Widget

சுன்னாகம் பொலிஸாரினால் தாக்கப்பட்டமை தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு!

இளைஞர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் நீதி கேட்ட போது, தனது மோட்டார் சைக்கிளுக்குள் கஞ்சாவை வைத்து தன்னை அச்சுறுத்தியதாக யாழ்.வர்த்தகர் மனித உரிமை ஆணைக்குழுவில் நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) முறைப்பாடு செய்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்.புன்னாலைக்கட்டுவன் பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்திற்கு அருகில் மாவீரர் நாளான கடந்த 27ஆம் திகதி இளைஞர்கள் மீது சுன்னாகம் பொலிஸார் தாக்குதல்களை மேற்கொண்டனர்.

இதன்போது அருகில் வர்த்தக நிலையத்தில் இருந்த வர்த்தகர் இதனை அவதானித்து, சம்பவ இடத்திற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று பொலிஸாரிடம் இளைஞர்கள் மீது எதற்காக தாக்குதலை மேற்கொண்டீர்கள்? என நியாயம் கேட்டுள்ளார்.

அதன்போது பொலிஸார் குறித்த வர்த்தகரைத் தகாத வார்த்தைகளால் பேசி அவரையும் தாக்கியுள்ளனர். அதனால் வர்த்தகர் தனது மோட்டர் சைக்கிளை அவ்விடத்தில் கைவிட்டு விட்டுத் தப்பியோடியுள்ளார்.

அதன் பின்னர் சட்டத்தரணி ஒருவரின் உதவியை நாடி மோட்டார் சைக்கிளை சம்பவ இடத்தில் இருந்து மீட்கச் சட்டத்தரணியுடன் சென்ற வேளை வர்த்தகரின் மோட்டார் சைக்கிளில் இருந்து 200 கிராம் கஞ்சாவை மீட்டு உள்ளோம் எனப் பொலிஸார் தெரிவித்து உள்ளனர்.

இதனால் இது தொடர்பில் குறித்த வர்த்தகர் மனித உரிமை ஆணைக்குழுவில் தனக்கு எதிராக சுன்னாகம் பொலிஸார் பொய்க்குற்றச் சாட்டினை முன் வைத்துள்ளதாக முறைப்பாடு செய்துள்ளார்.

Related Posts