சுன்னாகம் நிலத்தடி நீர் மாசு: மத்திய சுகாதாரப் பணிப்பாளருக்கு பகிரங்கப் பிடியாணை!

சுன்னாகம் பகுதியில் நிலத்தடி நீரில் கழிவு ஓயில் மாசாகக் கலந்தமை தொடர்பாக நீதிமன்றில் தொடுக்கப்பட்ட வழக்கில் மத்திய சுற்றாடல் மற்றும் குடியிருப்பு சுகாதாரப் பணிப்பாளருக்கு பகிரங்கப் பிடியானையை மல்லாகம் நீதவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளதுடன் கொழும்பு சிரேஸ்டப் பொலிஸ் அத்தியட்சகரையும் மன்றில் முன்னிலையாகுமாறு அழைப்புக் கட்டளையும் பிறப்பித்துள்ளது.

குறித்த வழக்கு விசாரனையானது நேற்றைய தினம் மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.யூட்சன் முன்னிலையில் விசாரனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே மேற்படி உத்தரவை நீதவான் பிறப்பித்துள்ளார். குறித்த வழக்கு விசாரனையில் பாதிக்கப்பட்ட பொது மக்கள் சார்பாக சட்டத்தரணிகளான பா.பார்த்தீபன், தெ.சோபிதன், சோ.தேவராஜா ஆகியோர் மன்றில் முன்னிலையாகி இருந்தனர்.

நீர்வழங்கல் வடிகாலமைப்பு அதிகார சபையின் சார்பாக அரச சட்டத்தரணி பிருந்தா குணரத்தினம் மன்றில் முன்னிலையாகி இருந்தார். கடந்த வழக்குத் தவனையின் போது விடுவிக்கப்பட்ட பகுதிகளிலும் உள்ள கிணறுகளில் கழிவு ஒயில் கலந்துள்ளதா, அது குடிப்பதற்கு உகந்ததா? என்பது தொடர்பாக ஆய்வு செய்து மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். நீர்வழங்கல் வடிகாலமைப்பு அதிகார சபைக்கு மல்லாகம் நீதவான் உத்தரவு இட்டிருந்தார்.

இந்நிலையில் நேற்றைய வழக்கு விசாரனையின் போது நீர் வழங்கல் வடிகாலமைப்பு சார்பாக மன்றில் முன்னிலையான சட்டத்தரணி நீர் வழங்கல் வடிகாலமைப்பு அதிகார சபையானது சுன்னாகம் பிரதேசத்திலிருந்து 4 கிலோ மீற்றர் தூரத்திற்கு ஆய்வு செய்திருந்ததாக மன்றில் அறிக்கை சமர்பித்து இருந்தார். இந்நிலையில் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள கிணறுகளைப் பரிசோதனை செய்து அது குடிப்பதற்கு உகந்த நீரா என்பது தொடர்பாக அறிக்கை சமர்ப்பிப்பதற்கு இரண்டு மாத கால அவகாசம் தேவை என மன்றில் கூறியிருந்தார்.

மேலும் கிணறுகளில் மேற்கொள்ளப்படுகின்ற ஆய்வு நடவடிக்கையின் ஊடாக அந் நீரின் இரசாயனக் கழிவுகள் கலந்திருக்கின்றதா?, என்பதைக் கண்டறிய முடியும். அதற்கான தொழில்நுட்ப வசதிகள் உள்ளன. எனினும் கழிவு ஓயில் எண்ணெய் கலந்துள்ளதா என்பதை கண்டறியக் கூடிய தொழில்நுட்ப வசதிகள் இல்லையெனவும், இது தொடர்பாக குறிக்கப்பட்ட அமைச்சுக்குத் தெரியப்படுத்துவதாகவும் அவர் மன்றில் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து பதிலளித்த நீதிவான் குறித்த ஆய்வு அறிக்கையை சமர்ப்பிக்க நீர் வழங்கல் வடிகாலமைப்பு அதிகாரசபையானது கோரிய கால அவகாசத்தை வழங்குவதற்கு அனுமதி அளித்திருந்ததுடன் அக் கிணறுகள் உள்ள நீரானது மக்கள் குடிப்பதற்கு உகந்ததா? இல்லையா? என்ற அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து கடந்த வழக்கு தவணையின் போது மத்திய சுற்றாடல் மற்றும் குடியிருப்பு சுகாதார பணிப்பாளருக்கு மன்றில் முன்னிலையாகுமாறு பிடியானை பிறப்பித்திருந்த போது அவர் மன்றில் முன்னிலையாகாத காரணத்தால் அவருக்கு பகிரங்கப் பிடியானை கொழும்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியஸ்சகர் ஊடாக பிறப்பித்துள்ளதுடன் கொழும்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரையும் அடுத்த வழக்குத் தவணையின் போது மன்றில் முன்னிலையாகுமாறு அழைப்புக் கட்டளை அனுப்பவும் உத்தரவிட்டார்

இவ்வழக்கு விசாரனை எதிர்வரும் 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Related Posts