சுன்னாகம் கொலை வழக்கு : பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பிணை மறுப்பு

சுன்னாகத்தில் கைதுசெய்யப்பட்டு பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த சிறிஸ்கந்தராசா சுமணன் என்ற இளைஞனை சித்திரவதை செய்து கொலை செய்தது தொடர்பிலான வழக்கில், பொலிஸ் உத்தியோகத்தர்களது, பிணை மனு யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனினால்.நிராகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் வெளிநாடு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள ஒருவருக்கு எதிராக சர்வதேச பிடியானை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் எதிரிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளவர்களில் 5 பொலிஸ் உத்தியோகத்தர்கள் நீதிமன்றில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டிருந்த நிலையில் இரண்டு எதிரிகளுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது.

இவர்களில் ஒருவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார். மற்றுமொருவர் வெளிநாடு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

பிரதிவாதிகள் சார்பில் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணிகள் அவர்களை பிணையில் செல்ல அனுமதிக்க வேண்டும் என பிணை விண்ணப்பம் செய்தனர்.

சட்டமா அதிபரின் பிரதிநிதியாக நீதிமன்றில் ஆஜராகியிருந்த பிரதி மன்றாடியார் அதிபதி குமார் ரட்னம் இந்தப் பிணை விண்ணப்பத்திற்குக் கடும் ஆட்சேபணை தெரிவிப்பதாகக் கூறினார்.

அப்போது அவர் மேலும் கூறியதாவது,

கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் இதில் 5 எதிரிகளுக்கு எதிராக கொலை வழக்கு விசாரணை நடக்கின்றது. மேல் நீதிமன்றத்தில் இந்த 5 பேர் உட்பட மொத்தமாக 8 எதிரிகளுக்கு எதிராக சித்திரவதைக் குற்ற வழக்கு சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இரண்டு வழக்குகளிலும் ஒன்றிலிருந்து 7 வரையிலான சாட்சிகள் சிவிலியன் சாட்சிகளாக உள்ளனர். இந்த வழக்குகளில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் எதிரிகளாக உள்ளனர்.

இவர்களைப் பிணையில் செல்ல அனுமதித்தால் சாட்சிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படும். வழக்கு நடவடிக்கைகளில் தலையீடு ஏற்படும் சுதந்திரமாக நீதி விசாரணை செய்ய முடியாத நிலைமை ஏற்படும். எனவே. இரண்டு நீதிமன்றங்களிலும் சிவில் சாட்சிகள் சாட்சியமளித்து முடியும் வரை இவர்களைப் பிணையில் விடக்கூடாது, என்றார்.

இதன்போது நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்த எதிரிகளான 7 பொலிஸ் உத்தியோகத்தர்களையும் டிசம்பர் 5ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதிபதி இளஞ்செழியன் அவர்களின் பாதுகாப்பு கருதி வவுனியா சிறைச்சாலையிலோ அல்லது யாழ் சிறைச்சாலையிலோ அவர்களை வைக்காமல் அனுராதபுரம் சிறைச்சாலையில் அவர்களைத் தடுத்து வைக்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Related Posts