சுன்னாகம் பகுதியிலுள்ள கிணறுகளில் ஏற்பட்ட கழிவு எண்ணெய் கசிவை ஆராயும் பொருட்டு 9 பேர் கொண்ட குழுவொன்று வடமாகாண சபையால் அமைக்கப்பட்டுள்ளதாக, வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.
வடமாகாணசபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் இன்று திங்கட்கிழமை (19) நடைபெற்றபோதே, அவைத்தலைவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் நெறிப்படுத்தலில் அமைக்கப்பட்டுள்ள இந்தக்குழு, எண்ணெய் கசிவு தொடர்பில் ஆராய்ந்து வடமாகாண சபைக்கு அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளது.
இந்தக் குழுவின் செயற்பாட்டில் வினைத்திறனையும் சிறப்பான முடிவையும் பெறும் பொருட்டு அவர்களின் பெயர் விபரங்கள் வெளியிடமுடியாது என அவைத்தலைவர் குறிப்பிட்டார்.
சுன்னாகம் மின்சார நிலைய வளாகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட கழிவு எண்ணெய் காரணமாக, சுன்னாகம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலுள்ள கிணறுகளில் எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டு, மல்லாகம் நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த எண்ணெய் கசிவானது, தற்போது சுமார் 800க்கும் அதிகமான கிணறுகளில்,தெல்லிப்பளை வரையில் பரவியுள்ளதாக தெல்லிப்பளை சுகாதார வைத்தியதிகாரி பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் பகுதிகளுக்கான குடிநீர் விநியோகத்தை வலிகாமம் தெற்கு மற்றும் வலிகாமம் வடக்கு பிரதேச சபையினர் மேற்கொண்டு வருகின்றனர்.