சுன்னாகம் கழிவு எண்ணெய்: குற்றச்சாட்டை மறுக்கிறது மின்சார நிறுவனம்

யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் குடிநீர் கிணறுகளில் கழிவு எண்ணெய் கலந்துவருகின்றமைக்கும் அப்பகுதியில் அமைந்துள்ள நொதேர்ன் பவர் கம்பனியின் செயற்பாட்டுக்கும் இடையில் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

jaffna_power_plant_chunnnakam

இந்த விடயம் தொடர்பாக ஆராய்வதற்காக யாழ். மற்றும் பேராதனை பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள் உள்ளிட்ட நிபுணர் குழுவொன்றை அரசாங்கம் நியமித்திருப்பதை நொதேர்ன் பவர் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் லால் பெரேரா வரவேற்றுள்ளார்.

தமது நிறுவனத்தில் இருந்து வெளியாகும் கழிவு எண்ணெய் நிலத்தில் சேர்வதில்லை என்றும் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள தாங்கிகளில் கழிவுகள் சேகரிக்கப்பட்டு மூன்றாம் தரப்பினரால் வெளியில் கொண்டு செல்லபபடுவதாகவும் கழிவு எண்ணெய் எரி உலைகளுக்குப் பயன்படுத்தப்படுவதனால், அதனை தமது நிறுவனம் வர்த்தக ரீதியாக நல்ல விலைக்கு விற்று வருவதாகவும் லால் பெரேரா கொழும்பில் நடந்த ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

2009 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தமது நிறுவனம் யுத்தச் சூழலில் யாழ்ப்பாணத்திற்குத் தரைவழிப் போக்குவரத்து இல்லாத காலத்தில் அங்குள்ள மக்களுக்கு மின்சாரம் வழங்கி சேவையாற்றி வந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

தேசிய மின்விநியோக கட்டமைப்பில் யாழ்ப்பாணம் உள்ளடக்கப்பட்டுள்ள போதிலும், மின்சாரம் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்ற நேரத்தில் சில மணித்தியாலங்கள் மாத்திரமே தமது நிறுவனம் மின்சாரத்தை உற்பத்தி செய்து அந்த கட்டமைப்புக்கு வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சிறிதளவு நேரமே செயற்படும் தமது நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்படும் கழிவு எண்ணெய் 2, 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிணறுகளுக்குச் சென்று கலப்பது சாத்தியமற்ற விடயம் என்றும் லால் பெரெரா கூறினார்.

தமது நிறுவனம் சுன்னாகத்தில் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர், அங்கு கழிவு எண்ணெய் நிரம்பிய ஒரு குளம் இருந்ததாகவும், 2012 ஆம் ஆண்டு அதனை மண் போட்டு நிரப்பி அந்த இடத்தில் துணை-மின்நிலையம் ஒன்றை அரசாங்கம் அமைத்துள்ளதாகவும், ஆனால் எவரும் அந்த எண்ணெய்க் குளத்தில் நிரம்பியிருந்த கழிவு எண்ணெய்க்கு என்ன நடந்தது என்பதைப் பற்றி ஆராயவில்லை என்றும் நொதேர்ன் பவர் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Related Posts