சுன்னாகத்தில் காற்றாலை அமைக்க அமைச்சரவை அங்கீகாரம்!

சுன்னாகத்தில் இரண்டு காற்றாலை மின் திட்டங்களை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது. தலா 10 வாற்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வகையில் குறித்த காற்றாலைகள் அமைக்கப்படவுள்ளன.

சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, கடந்த செவ்வாய்க்கிழமை அமைச்சரவையில் இந்த திட்டங்களை சமர்ப்பித்திருந்தார்.

இதற்கு அமைச்சரவையால் அனுமதியளிக்கப்பட்டதையடுத்து சுன்னாகத்தில் இரண்டு காற்றாலை மின் திட்டங்களை அமைப்பதற்கான கேள்விப் பத்திரங்களை சிறீலங்கா அரசாங்கம் கோரவுள்ளது.

புதுப்பிக்கத்தக்க மின்சக்தி திட்டங்களை ஊக்குவிக்கும் நடவடிக்கையாகவும், எதிர்கால மின்தேவையை ஈடு செய்யும் நடவடிக்கையாகவும், இந்த இரண்டு காற்றாலை மின்திட்டங்களும் செயற்படுத்தப்படவுள்ளன.

சிறீலங்காவில் தற்போது 3900 மெகாவாற் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது. 2020ஆம் ஆண்டு, மின்சார உற்பத்தி ஆற்றலை 4955 மெகாவாட்டாக அதிகரிக்க சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Posts