சுந்தர்.சி படம், உறுதி செய்தார் ஏ.ஆர்.ரகுமான்

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாரிக்க உள்ள அவர்களது 100வது படத்தை சுந்தர் .சி இயக்க உள்ளார். இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கப் போகிறார் என கடந்த பத்து நாட்களாகவே செய்திகள் வந்து கொண்டிருந்தன. ஏற்கெனவே, இந்தப் படத்தில் சூர்யா நடிக்கப் போகிறார் என்று செய்திகள் வந்து, அதன் பின் சூர்யா தரப்பிலிருந்து அப்படி எதுவும் இல்லை என்று மறுப்பு தெரிவித்திருந்தார்கள். அதனால், ரகுமான் இசையமைக்கப் போகிறாரா இல்லையா என்பது குறித்து உறுதியான தகவல் எதுவும் இல்லாமல் இருந்தது.

sundarc-rahman

இந்த நிலையில் நேற்று தன்னுடைய டிவிட்டர் மூலம் இப்படத்திற்கு இசையமைக்கப் போவது குறித்து ரகுமான் உறுதி செய்தார். “சுந்தர் .சி இயக்க உள்ள ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100வது லட்சியப் படத்திற்கு இசையமைக்கப்போவது மிக்க மகிழ்ச்சியானது. படக்குழுவினருக்கு என்னுடைய இனிய வாழ்த்துகள்,” எனத் தெரிவித்துள்ளார்.

இந்தியத் திரையுலகில் இதுவரை யாரும் இப்படி ஒரு படத்தை தயாரித்ததில்லை என்று சொல்லுமளவிற்கு மிகப் பெரிய பட்ஜெட்டில் இப்படம் உருவாக உள்ளதாகத் தெரிகிறது. ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் படத்தை உருவாக்க உள்ளார்கள். சுந்தர் .சி இப்படத்திற்காக ஏற்கெனவே சில முக்கிய ஹீரோக்களுடன் பேசியுள்ளார். ஆனால், யாருமே அவருக்கு பாசிட்டிவ்வான பதிலைச் சொல்லவில்லை என்று தெரிகிறது. இப்போது ஏ.ஆர்.ரகுமானும் படத்தில் இணைந்துள்ளதால் படத்திற்கு மேலும் ஒரு தனி அந்தஸ்து கிடைத்துள்ளது. வேண்டாமென்றவர்கள் கூட இனி இப்படத்தில் நடிக்க போட்டி போடுவார்கள் என்பது மட்டும் நிச்சயம்.

ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், கார்த்திக், சரத்குமார், விஷால், பிரபுதேவா, மாதவன் உள்ளிட்டோர் நடித்த சுமார் 30க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவர் சுந்தர் .சி என்பது குறிப்பிடத்தக்கது. அவர் கடந்த சில ஆண்டுகளில் இயக்கி வெளிவந்த ‘அரண்மனை 2, அரண்மனை, தீயா வேலை செய்யணும் குமாரு, கலகலப்பு’ ஆகியவை அதிக வசூலைக் குவித்த படங்கள். பெரிய ஹீரோக்களின் படங்களை விட இந்தப் படங்கள் நல்ல வசூலைப் பெற்றது. சுந்தர் .சியுடன் ஏ.ஆர்.ரகுமான் இணைந்திருப்பது இந்தியத் திரையுலகில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts