தமிழ் தேசியக் கூட்டமைப்பின், யாழ்.மாநகர சபைத் தேர்தலுக்கான விஞ்ஞாபனம் நேற்று (திங்கட்கிழமை) பிற்பகல் வெளியிடப்பட்டது.
வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில், நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
‘சுத்தமான பசுமை மாநகரம்’ என்ற தொனிப்பொருளினாலான குறித்த தேர்தல் விஞ்ஞாபனத்தை தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை. சேனாதிராஜா வெளியிட்டு வைக்க, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றாகிய புளொட் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் பெற்றுக் கொண்டார்.
யாழ். நகர அபிவிருத்தி, யாழ். நகர மத்தியில் அமைக்கப்பட்டு வரும் கலாசார மத்திய நிலையத்தின் கட்டுமானப் பணிகள் துரிதப்படுத்தப்படுத்தல், மீளக் குடியேறும் முஸ்லீம் மக்களின் வீடமைப்பு, வாழ்வாதாரம், வீதி மறுசீரமைப்பு, பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் திட்டங்களை அறிமுகப்படுத்தல் உள்ளிட்ட பல விடயங்கள் இத்தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ளன.
விஞ்ஞாபனத்தின் உள்ளடக்கத்தினை வடக்கு மாகாண அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் வாசித்து மக்களுக்கு வெளிப்படுத்தினார்.
இந்நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், வடக்கு மாகாண சபை உறுப்பினர்களாக ஆர்.ஜெய்சேகரம், பா.கஜதீபன், ஆ.பரம்சோதி உள்ளிட்ட மாநகர வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.