கே.எஸ்.ரவிக்குமார் தற்போது கன்னட நடிகர் சுதீப்பை வைத்து ‘முடிஞ்சா இவன புடி’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நித்யாமேனன் நடித்து வருகிறார். சுதீப் கதாநாயகனாக நடிக்கும் முதல் நேரடி தமிழ் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தில் சுதீப்புக்கு வில்லனாக முகேஷ் திவாரி, சரேத் லோஹித்சுவா ஆகியோர் நடிக்கின்றனர். மேலும், நாசர், சாய் ரவி, அவினாஷ், அச்சுதா குமார், சதிஷ், இமான் அண்ணாச்சி, பரத் கல்யாண் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன் பெங்களூரில் தொடங்கி தற்போது முடிவடைந்துள்ளது. தற்போது இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இப்படத்துக்காக சென்னை அம்பத்தூரில் பல லட்சம் செலவில் போலீஸ் கமிஷனர் அலுவலகம் போல் செட் அமைக்கப்பட்டு, 10 நாட்கள் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர். இந்த படப்பிடிப்பில் சுதீப், நித்யாமேனன், நாசர் மற்றும் ஏராளமான துணை நடிகர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, சென்னையில் உள்ள பல்வேறு இடங்களில் 30 நாட்கள் படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.