கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சுதந்திர தினத்தைப் புறக்கணித்து தமது போராட்டத்தைத் தொடர்ந்திருந்தனர். இதன்போது கறுப்பு உடையணிந்தும், தலையில் கறுப்புப் பட்டி அணிந்தும் இருந்தனர்.
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் நேற்றுடன் 350 நாட்களாக தமது உறவுகளை மீட்டுத்தருமாறு கோரி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராடி வருகிறார்கள்.
இதுவரை தமக்கான தீர்வுகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை என்றும், இதனால் இந்த சுதந்திர தினத்தை தம்மால் கொண்டாட முடியாது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், வெள்ளையர்கள் நாட்டைக் கொடுத்துச்செல்லும் போது எம்மை அடிமையாக்கிச் சென்றுவிட்டார்கள். அதன் தொடர்ச்சி இன்று வரைக்கும் தொடர்கின்றது.
எமது உறவுகளைத் தேடி நாம் வீதியோரத்தில் நிற்கின்றோம். எம்மைப் பற்றிச் சிந்திப்பதற்கு இந்த ஆட்சியாளர்களுக்கோ அல்லது எமது பிரதிநிதிகளுக்கோ அக்கறை இல்லை. இனியும் இவர்களை நம்பிப் பலனில்லை. எம்மை அடகுவைத்துச் சென்ற சர்வதேசத்தின் தலையீட்டுடனே எமது பிரச்சனைகளுக்குத் தீர்வு காணமுடியும்.
எப்போது எமது பிள்ளைகள் மீட்டெடுக்கப்படுகிறார்களோ அப்போது தான் எமக்கு சுதந்திர தினம் என்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்த உறவினர்கள் தெரித்தனர்.