சுதந்திர தினத்தன்று பருத்தித்துறை- பொன்னாலை வீதி விடுவிப்பு!!

இராணுவத்தினரின் உயர்பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள பருத்தித்துறை-பொன்னாலை வீதி எதிர்வரும் 4 ஆம் திகதி சுதந்திரதினத்தன்று முற்றாக விடுவிக்கப்படவுள்ளது. இவ்வீதி மயிலிட்டித்துறைமுகத்தினை அண்டிய பகுதியில் இதுவரை காலமும் இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் 3 கிலோ மீற்றர் வரையான பகுதி உயர்பாதுகாப்பு வலயமாக இருந்ததுடன் இராணுவத்தினரின் போக்குவரத்து மட்டுமே இடம்பெற்று வந்தது.

இதனால் பருத்தித்துறையில் வசிக்கும் மயிலிட்டி மீனவர்கள் கடந்த ஆண்டு விடுவிக்கப்பட்ட மயிலிட்டித்துறைமுகத்தின் பயனை முழுமையாக பெறமுடியாது பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். குறித்த வீதியானது படையினரின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதனால் மக்கள் மேலதிகமாக 50 கிலோமீற்றர் தூரத்தையும், சொந்த வாகனங்களில் பயணிப்போர், 20 கிலோமீற்றர் தூரத்தையும் கடந்தே தமது தேவைகளை பூர்த்தி செய்தனர்.

இவ் வீதி கடந்த ஆண்டு இறுதிப்பகுதியில் பொதுமக்களின் பாவனைக்கு திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட போதும் சுதந்திரதினம் அன்று முற்றாக திறந்து விடுவதற்கு இராணுவத்தினர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இதன் மூலம் இப்பகுதியில் மீள்குடியேறிய மக்கள் மட்டுமல்லாது மயிலிட்டி மீனவர்களும் குறுகிய நேரத்தில் வந்து தமது இடங்களை சீரமைத்து குடியமர்வதற்கன ஏற்பாடுகளில் ஈடுபட முடியும்.

இதேவேளை விடுவிக்கப்படும் பருத்தித்துறை- பொன்னாலை வீதி பக்கமாக உள்ள மயிலிட்டி துறைமுகம் அண்டிய ஒரு தொகுதி மக்களின் காணிகளும் விடுவிக்கப்படுவதற்கான ஏற்பாடுகளும் இடம்பெற்றுவருவதுடன் மயிலிட்டி துறைமுகத்திற்கு அண்மையில் உள்ள இராணுவ விடுதியாக காணப்படும் மயிலிட்டி காசநோய் வைத்தியசாலையும் விரைவில் விடுவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Related Posts