சுதந்திரமாக நடமாடும் ஒருவரால் 30 நாட்களில் 500 பேருக்கு கொரோனா தொற்றும் அபாயம்!

சுதந்திரமாக நடமாடும் ஒருவரால் 30 நாட்களில் குறைந்தபட்சம் 500 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதம செயலாளர் டொக்டர் ஹரித அளுத்கே இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார ஆலோசனைகளை உரிய முறையில் கடைப்பிடிக்காவிட்டால் மார்ச் 25 தொடக்கம் ஏப்ரல் 7ஆம் திகதி வரையான காலப்பகுதியில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை பாரியளவில் அதிகரிக்கக்கூடும் என அவர் எச்சரித்துள்ளார்.

சமூக இடைவௌி பின்பற்றப்படாத சந்தர்ப்பத்தில் சுதந்திரமாக நடமாடும் ஒருவரால் 30 நாட்களில் குறைந்தபட்சம் 500 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றக்கூடிய அபாயமுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

50 வீதமான சமூக இடைவௌியினால் அதனை 15 ஆகக் குறைக்க முடியும். 70 வீதமான சமூக இடைவௌி பேணப்பட்டால், இதனை 2.5 வீதம் வரை குறைக்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மார்ச் மாதம் 11 ஆம் திகதி இலங்கையில் முதலாவது கொரோனா நோயாளி பதிவானதுடன், மார்ச் 15 ஆம் திகதி வரை நாட்டில் நோயாளர்களின் நடமாட்டம் அதிகளவில் காணப்பட்டுள்ளது.

மார்ச் மாதம் 16 ஆம் திகதியிலிருந்து 19 ஆம் திகதி வரை விமான நிலையம் மூடப்பட்டமை, பாடசாலை விடுமுறை மற்றும் விடுமுறைக் காலம் அறிவிக்கப்பட்டமை போன்ற நடவடிக்கைளால் சமூக இடைவௌி 50 வீதம் ஏற்பட்டதாகக் கருத முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மார்ச் 20 ஆம் திகதியிலிருந்து நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டதால், அந்த இடைவௌி 70 வீதம் வரை உயர்வடைந்திருக்கும் என்பது வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நம்பிக்கையாகும் எனவும் டொக்டர் ஹரித அளுத்கே கூறியுள்ளார்.

எனினும், ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதால் அந்த இடைவௌி பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Posts