சுதந்திரக்கிண்ணத் தொடரின் முக்கியமான நேற்றய போட்டியில் இலங்கை அணி 2 விக்கெட்டுகளால் தோற்கடித்த பங்களாதேஷ் அணி இலங்கையின் சுதந்திரக் கிண்ணத்திற்கான இறுதிப் போட்டியில் மோதவுள்ளது.
பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையில் இடம்பெறும் முக்கியமான போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி இலங்கை அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.
இப் போட்டியில் ஆரம்பம் முதல் இலங்கை அணியின் விக்கெட்டுகள் சரிக்கப்பட ஒருகட்டத்தில் 41 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இந்நிலையில் அதிரடியாக விளையாடிய குசல் ஜனித் பேரேராவும் திஸர பெரேராவும் ஓட்ட எண்ணிக்கையை ஸ்திரமான நிலைக்கு கொண்டு வந்தனர்.
சிறப்பாக துடுப்பெடுத்தாடிய குசல் ஜனித் பெரேரா 61 ஓட்டங்களையும் திஸர பெரேரா ஆட்டமிழக்காது 58 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
இப்போட்டியில் குசல் ஜனித் பெரேரா இருபதுக்கு – 20 போட்டியில் அதிவிரைவில் 1000 ஆயிரம் ஓட்டங்களைக் கடந்த இலங்கை வீரர் என்ற பெருமையைப் பெற்றார். இவர் 34 போட்டிகளில் 1000 ஓட்டங்களைக் கடந்துள்ளார்.
இதற்கு முதல் குமார் சங்கக்கார 38 போட்டிகளில் 1000 ஓட்டங்களை கடந்ததே சாதனையாக இருந்தது.
இதேவேளை, 6 விக்கெட்டுகக்காக குசல் ஜனித் பெரேராவும் திஸர பெரேராவும் இணைந்து இணைப்பாட்டமாக 97 ஓட்டங்களைப்பெற்று இலங்கையின் இருபதுக்கு – 20 போட்டியில் சாதனையைப் படைத்தனர்.
பந்துவீச்சில் பங்களாதேஷ் அணி சார்பில் முஸ்தபிகுர் ரஹ்மான் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்நிலையில் 160 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய பங்களாதேஷ் அணிக்கு தமிம் இக்பால் நல்ல ஆரம்பத்தினை வழங்க முதலாவது விக்கெட் 11 ஓட்டங்களைப் பெற்றபோது பறிக்கப்பட்டது.
சீரான இடைவெளிகளில் பங்களாதேஷ் அணியின் விக்கெட்டுகள் பறிக்கப்பட்டாலும் இறுதிவரை போராட்டிய பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்ட வீரர்கள் 19.5 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்து 2 விக்கெட்டுகளால் பங்களாதேஷ் அணியை வெற்றிப் பாதைக்கு இட்டுச்சென்றனர்.
இறுதிவரை மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற போட்டியில் இறுதியில் 2 பந்துகளில் 6 ஓட்டங்கள் தேவை என்ற நிலையேற்பட்டது. இறுதிபந்திற்கு முதல் பந்தில் 6 ஓட்டங்களைப் பறக்கவிட்ட மகமதுல்லா பங்களாதேஷ் அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
பங்களாதேஷ் அணிசார்பில் துடுப்பாட்டத்தில் தமிம் இக்பால் 50 ஓட்டங்களையும் இறுதிவரை போராடிய மஹமதுல்லா 43 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் அகில தனஞ்சய 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இலங்கை அணியை 2 விக்கெட்டுகளால் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி சுதந்திரக்கிண்ண இறுதிப்போட்டியில் இந்திய அணியை நாளை ஞாயிற்றுக்கிழமை கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் எதிர்கொள்ளவுள்ளது.