திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை சுர்ஜித், கடந்த 25-ம் தேதி ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவறி விழுந்தான். சிக்கியுள்ள குழந்தையை மீட்கும் பணி, 63 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது. பலகட்ட முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில் தற்போது குழந்தையை மீட்க புதிய முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
ஆழ்துளைக் கிணறு அருகே சுரங்கம்போல மற்றொரு குழித் தோண்டப்பட்டு குழந்தையை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்காக ஓஎன்ஜிசியின் ரிக் இயந்திரம் வரவழைக்கப்பட்டது. இந்த இயந்திரத்தை வைத்து குழி தோண்டும் போது பாறைகள் இருந்ததால் அப்பணியில் தொய்வு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அதிக திறன் கொண்ட இரண்டாவது இயந்திரம் இராமநாதபுரத்திலிருந்து கொண்டு வரப்பட்டது.
குழி தோண்ட ரிக் இயந்திரம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று காலை முதல் இயந்திரங்கள் செயல்பட்டாலும், பாறைகள் குறுக்கீடும், மழை போன்ற காரணங்களால் தோண்டும் பணி காலதாமதமாகி வருகிறது. இதுவரை 40 அடி தோண்டப்பட்டு இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்த நிலையில், கடினமாக உள்ள பாறையை உடைக்க சென்னையில் இருந்து ஆகாஷ் என்ற புதிய டிரில் பிட் வருகிறது. புதிய வகை டிரில் பிட் ஒரு மணி நேரத்தில் நடுகாட்டுப்பட்டிக்கு வரும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்தவர் பிரிட்டோ. கட்டிட தொழிலாளியான இவர் வீட்டின் அருகே விவசாயமும் செய்து வந்தார். இவருடைய மனைவி கலாமேரி. இவர்களுடைய மகன்கள் புனித் ரோசன் (வயது 4), சுஜித் வில்சன் (வயது 2).
பிரிட்டோ தனது வீட்டு உபயோகத்திற்கான தண்ணீர் தேவைக்காக, கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டின் அருகே ஆழ்துளை கிணறு அமைத்திருந்தார். சுமார் 400 அடி ஆழத்திற்கு அந்த ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது.
ஒரு ஆண்டு வரை அந்த ஆழ்துளை கிணறு பயன்பாட்டில் இருந்தது. பின்னர் தண்ணீர் இல்லாத நிலையில், அந்த ஆழ்துளை கிணறு பயன்பாடின்றி இருந்தது. இதனால் ஆழ்துளை கிணற்றை மூடும் வகையில், மேல்மட்டம் வரை மண்ணை கொட்டியுள்ளனர். தற்போது அந்த பகுதியில் சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக அப்பகுதியில் மழை பெய்ததால் ஆழ்துளை கிணற்றை மூடியிருந்த மண் சுமார் 30 அடி ஆழம் வரை கீழே இறங்கியது.
இந்நிலையில், பிரிட்டோ வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் கலாமேரி, சுஜித்வில்சனுடன் இருந்தார்.வெள்ளிக்கிழமை மாலை சுமார் 5.30 மணியளவில் சுஜித்வில்சன் அப்பகுதியில் விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது அவன் சோளம் சாகுபடி செய்யப்பட்ட பகுதியில் நடந்து சென்றபோது, எதிர்பாராதவிதமாக ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான். இதில் மண்ணில் உராய்ந்தபடி சென்று அடிப்பகுதியில் சிக்கினான்.
இதைக்கண்ட கலாமேரி அலறியடித்துக்கொண்டு அங்கு ஓடிச்சென்றார். குழந்தை அடிப்பகுதியில் சிக்கியிருப்பதை கண்டு அவர் சத்தம்போட்டார். இதனால் அக்கம், பக்கத்தினர் அங்கு திரண்டு வந்து பார்த்தனர். மேலும் உடனடியாக இதுபற்றி மணப்பாறை தீயணைப்பு துறையினர், போலீசார் மற்றும் பிரிட்டோவுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து வேலைக்கு சென்ற இடத்தில் இருந்து, பிரிட்டோ பதறியடித்துக்கொண்டு அங்கு வந்தார்.
மேலும் மணப்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு குத்தாலிங்கம் மற்றும் போலீசார், மணப்பாறை மற்றும் திருச்சியில் இருந்து தீயணைப்பு துறையினர் அங்கு விரைந்து வந்து பார்த்து, குழந்தையை மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். மிகவும் குறுகலான அந்த ஆழ்துளை கிணற்றில், ஆட்கள் யாரும் இறங்க முடியாத நிலையில், கிணற்றின் அருகே குழிதோண்டி குழந்தையை மீட்க முடிவு செய்தனர்.
அதன்படி அங்கு 4 பொக்லைன் எந்திரங்கள் உள்ளிட்ட 5 எந்திரங்கள் கொண்டு வரப்பட்டு, ஆழ்துளை கிணற்றின் அருகே குழிதோண்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது. இதற்காக அந்த பகுதியில் மின்விளக்கு வசதி செய்யப்பட்டது.
இதற்கிடையே அங்கு 108 ஆம்புலன்சுகள் வரவழைக்கப்பட்டு தயார் நிலையில் நிறுத்தப்பட்டன. ஆழ்துளை கிணற்றின் அடிப்பகுதியில் சிக்கியுள்ளதால், குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்படாமல் இருக்க ஆழ்துளை கிணற்றுக்குள் சிறிய டியூப் மூலம் ஆக்சிஜன் செலுத்தும் பணியில் மருத்துவக்குழுவினர் ஈடுபட்டனர். மேலும் அந்த குழிக்குள் கண்காணிப்பு கேமரா பொருத்தி, குழந்தையை கண்காணித்தனர்.
மணப்பாறை அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் முத்துகார்த்திகேயன் தலைமையிலான குழுவினர், ஆழ்துளை கிணற்றில் உள்ள குழந்தைக்கு தொடர்ந்து ஆக்சிஜன் வழங்குவது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டனர். ஆழ்துளை கிணற்றில் பொருத்தப்பட்ட கேமராவில் பதிவாகும் காட்சிகளை டி.வி.யில் பார்வையிட்டு, குழந்தையின் நிலையை கண்காணித்தனர். எந்திரங்கள் மூலம் இரவு 8.15 மணியளவில் சுமார் 17 அடி வரை குழி தோண்டப்பட்டிருந்தது. ஆனால் அதற்கு கீழே பாறை இருந்ததால், குழிதோண்ட முடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் மதுரையில் இருந்து, ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் நிபுணர் மணிகண்டன் தலைமையிலான குழுவினர் இரவு 8.30 மணியளவில் அங்கு வந்தனர். அவர்கள் தீயணைப்பு துறையினர் உள்ளிட்டோருடன் சேர்ந்து சுஜித் வில்சனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மணிகண்டன் கண்டுபிடித்துள்ள கருவி மூலம், குழந்தையை மீட்கும் பணி நடைபெற்றது. ஆனால் அந்த கருவி மூலம் மீட்பு பணியை முழுமையாக மேற்கொள்ள முடியவில்லை. இதையடுத்து கணினியால் இயங்கக்கூடிய சுருக்கு கயிறுகள் மூலம் மீட்பு பணி தொடங்கியது. இரவு 11 மணிக்கு மேலாகியும், அந்த பணி தொடர்ந்து நடைபெற்றது. குழாய்களில் கயிறுகளை விட்டு, குழாய்களை பிணைத்து ஆழ்துளை கிணற்றுக்குள் இறக்கி, குழந்தையை மீட்க முயன்றனர்.
ஆனாலும் குழந்தையின் கைகளில் சரியாக கயிற்றை பிணைக்க முடியாததால், மீட்பு பணியில் பின்னடைவு ஏற்பட்டது. இருப்பினும் மீட்பு பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டது. மீண்டும், மீண்டும் கயிறுகளை ஆழ்துளை கிணற்றில் இறக்கி குழந்தையை மீட்க முயன்றும் முடியவில்லை.
அதிகாலை 3.20 மணிக்கு நாமக்கல்லில் இருந்து வெங்கடேசன் தலைமையில் வந்த ஐ.ஐ.டி. குழுவினர் தாங்கள் கொண்டு வந்த நவீன கருவியை ஆழ்துளை கிணற்றுக்குள் அங்குலம் அங்குலமாக இறக்கினார்கள். சுமார் 20 நிமிடங்களுக்கு பிறகு அந்த கருவி குழந்தை சிக்கி இருந்த இடத்தின் அருகே சென்றது. அப்போது, அங்கு குழந்தை இல்லை. அதில் இருந்து மேலும் 50 அடி, அதாவது 30 அடியில் இருந்து 80 அடிக்கு சென்றது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த மீட்பு குழுவினர் அந்த கருவியை மேலும் கீழே இறக்க முயன்றனர். ஆனால் அந்த இடத்தில் இருந்து அதற்கு மேல் குழி குறுகலாக இருந்ததால், அந்த கருவியை கீழே இறக்க முடியவில்லை. இதனால் அந்த கருவியை மேலே எடுத்து அதில் பொருத்தப்பட்டிருந்த கைகளை மாற்றினார்கள். பின்னர் அதிகாலை 3.50 மணிக்கு மாற்று கைகள் பொருத்தி மீண்டும் அந்த கருவி ஆழ்துளை கிணற்றுக்குள் இறக்கப்பட்டது.
ஆனால் அதுவும் குழந்தை இருந்த இடத்தின் அருகே அதிகாலை 4 மணிக்கு சென்றது. அதற்கு கீழ் மீண்டும் அந்த கருவியை கொண்டு செல்லமுடியவில்லை. இதனால் மீட்பு குழுவினர் செய்வதறியாது திகைத்தனர். அதே நேரம் அந்த நவீன கருவி மூலம் குழந்தை சுஜித் வில்சன் சுவாசிப்பது உறுதி செய்யப்பட்டது.
பின்னர் அந்த கருவியின் விட்டத்தை குறுகலாக்கி ஆழ்துளை கிணற்றுக்குள் இறக்க மீட்பு குழுவினர் முயற்சி மேற்கொண்டனர். இதற்கிடையே அதிகாலை 5 மணிக்கு புதுக்கோட்டையில் இருந்து வீரமணி என்பவர் தலைமையில் ஒரு குழுவினர் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசுவிடம் எப்படி குழந்தையை மீட்கப்போகிறோம் என்று விளக்கினார்கள்.
இதை தொடர்ந்து அவர்கள் குழந்தையை மீட்க நடவடிக்கை மேற்கொண்டனர். காலை 4.30 மணிக்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவினரின் உதவி கோரப்பட்டது. அவர்கள் உடனடியாக சென்னையில் இருந்து நடுகாட்டுப்பட்டிக்கு புறப்பட்டனர். ஆனாலும் தொடர்ந்து மற்ற குழுவினர் விடிய, விடிய மீட்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து முயற்சித்தும் குழந்தையை மீட்க முடியவில்லை. அமைச்சர்கள் வெல்லமண்டிநடராஜன், விஜயபாஸ்கர், வளர்மதி, கலெக்டர் சிவராசு ஆகியோர் அந்த பகுதியிலேயே முகாமிட்டுள்ளனர்.
குழந்தை சுஜித் வில்சனை மீட்பதற்காக திருச்சி, மதுரை, நாமக்கல், கோவை, புதுக்கோட்டை உள்பட பல்வேறு இடங்களில் இருந்து தனித்தனி குழுவினர் வந்தனர். அவர்கள் தாங்கள் கண்டுபிடித்த கருவி மூலம் குழந்தையை மீட்டுவிடலாம் என்ற நம்பிக்கையில் மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால் ஒவ்வொரு குழுவினரின் முயற்சியும் பலன் அளிக்கவில்லை.
இதனைத்தொடர்ந்து திரைப்படத்துறையில் சினிமா சண்டை காட்சிகளில் விபத்து ஏற்பட்டால் மீட்பு நடவடிக்கையில் ஈடுபடும் குழுவினர், தகவல் அறிந்து சென்னையில் இருந்து நடுக்காட்டுப்பட்டிக்கு வந்தனர். இந்த குழுவினர் தாங்கள் வைத்திருந்த நவீன எந்திரம் மூலம் குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அந்த முயற்சியும் தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் நேற்று அதிகாலை முதல் குழந்தை சுஜித் வில்சனிடம் இருந்து எந்த அசைவும் இல்லை. தொடர்ந்து குழந்தைக்கு ஆக்சிஜன் கொடுக்கும் பணி நடைபெற்று வந்தது.
இன்று 4வது நாளாக மீட்புப்பணி நடைபெற்று வருகிறது. சிறுவன் சுஜித்தை மீட்க மற்றொரு குழியை தோண்ட பயன்படுத்தப்பட்ட ‘ரிக்’ இயந்திரத்தின் செயல்திறன் இதற்கு போதவில்லை என்பதால் நேற்று இரவு இரண்டாவது ‘ரிக்’ இயந்திரம் மீட்பு பணி நடக்கும் இடத்துக்கு வந்தது.
இந்நிலையில், இரண்டாவது இயந்திரத்தை பயன்படுத்தும் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அந்த இடத்தில் கடினமான பாறைகள் இருப்பதால் துளையிடுவதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் சிறுவன் சுஜித்தை மீட்க மற்றொரு குழி தோண்டும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இரவு பகலாக மீட்பு பணிகள் நடந்து வந்தாலும் கடினமான பாறைகள் இருப்பதால் மீட்புப்பணிகள் தாமதமாவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று (திங்கள்கிழமை) காலையில் மீட்புப்பணி நடக்கும் இடத்திற்கு வந்த நடிகர் தாமு, அங்கு சிறுவன் சுஜித் மீட்புக்காக பிரார்த்தனை மேற்கொண்டார்.
இதேவேளை சிறுவன் சுர்ஜித் மீட்பு பணி நடைபெறும் இடத்தில் இருந்து, இன்னொரு 15 வயது மதிக்கத்தக்க சிறுவன் செய்தியாளர்களிடம் ஒரு விடயத்தை கூறுகின்றான் அந்த வீடியோ காட்சியில் செய்தியாளர் ஒருவர் அந்த 15 வயது மதிக்கத்தக்க சிறுவனைப் பார்த்து கேட்கின்றார்
செய்தியாளார் – இந்த மீட்பு பணி ஆரம்பித்த நேரத்தில் இருந்து நீ ஒரு இடத்தில் நிற்காமல் எல்லா விடயங்களையும் கவனித்து கொண்டு திரிகிறியே எதற்காக என்று??,
சிறுவன் – இங்கே மீட்பு பணியில் இருப்பவர்கள் கூட சில தவறுகள் விடுகின்றார்கள் என்று!!
செய்தியாளர் – நீ சிறுவன், அவர்கள் பெரியவர்கள் அவர்கள் செய்வது தவறு என்று எப்படி உனக்கு தெரியும் என்று??
சிறுவன் – நான் சிறுவன் தான் ஆனால் எனக்கு இந்த விடயத்தில் நிறைய அனுபவம் உள்ளது, எனது வீடு சுர்ஜித் வீட்டிற்கு அருகில் தான் உள்ளது, எனது தந்தை இந்த ஆழ்துளை கிணறுகள் தோண்டும் தொழிலையே செய்து வந்தார் இப்போது அந்த தொழிலை கைவிட்டு விட்டார் அவர் அந்த தொழில் செய்யும் காலத்தில் கிணறு தோண்டும் பொழுது உள்ளே உபகரணங்கள் ஏதும் விழுந்து விட்டால் அதை வெளியே எடுக்க சில உத்திகளை கையாளுவார். அது விழுந்த பொருள் இருக்கும் ஆழத்தை பொறுத்தே எந்த உத்தியை கையாள வேண்டும் என்று முடிவெடுப்பார். சாதாரணமாக ஒரு 20 அடிக்குள் விழுந்த பொருள் இருக்குமாயின் நானே அந்த கிணற்றினுள் தலைகீழாக சென்று விழுந்த பொருளை எடுத்து வருவேன், அதை தான் ஆரம்பத்தில் செய்ய நானும் எனது தந்தையும் முடிவெடுத்தோம் ஆனால் இங்கே இருந்தவர்கள் அதற்கு சம்மதிக்கவில்லை. சிறுவன் சுர்ஜித் கிணற்றில் விழுந்த உடனே அவனுடைய தாயார் ஓடி வந்து எனது தந்தையிடம் கூறினார் நாங்கள் ஓடி வந்து பார்க்கும் போது அவன் குறைந்தது 10 அடி ஆழத்தில் தான் இருந்தான் அவன் மூச்சு விடும் சத்தமே வெளியே இருந்த எங்களுக்கு கேட்டது, உடனே எனது தந்தை ஓடி சென்று கயிறு போன்ற தேவையான பொருட்கள் எடுத்து வர கொஞ்சம் தாமதமாகி விட்டது ஏனெனில் அவர் அந்த தொழிலை கைவிட்டதால் பொருட்கள் சரியான இடத்தில் இருக்கவில்லை, ஒரு வழியாக எல்லாம் எடுத்து வருவதற்குள் சிறுவன் கிட்டத்தட்ட 20 அடிக்கு சென்று விட்டான் காரணம் கிணற்றில் உட்பகுதி மழையில் ஊறி ஈர தன்மையில் இருந்ததால் வழுக்கும் தன்மை இருந்து, அப்போது நான் கிணற்றினுள் தலைகீழாக இறங்க நானும் தந்தை தயார் ஆனோம் ஆனால் அங்கு இருந்தவர்கள் விடவில்லை, பிறகு ஜேசிபி இயந்திரம் மூலம் பக்கவாட்டில் தோண்ட ஆரம்பித்தார்கள் அப்போது கூட எனது தந்தை சொன்னார் இயந்திரத்தின் அதிர்வால் சிறுவன் இன்னும் கீழே போக வாய்ப்பு உள்ளது என்று யாரும் அதை பொருட்படுத்தவில்லை அதனால் தான் இவ்வளவு கடினமாக உள்ளது என்றான்.
செய்தியாளர் – சரி இப்போது உனது தந்தை எங்கே உள்ளார் என்று கேட்க அவன் சொன்னான் இங்கே இருக்கும் வல்லுநர்களின் முட்டாள் தனமான வேலைகளை பார்த்தால் எனக்கு கோபம் வருகிறது நான் இங்கு இருக்கவில்லை என்று வீடு சென்று விட்டார் என்றான்.
ஆரம்பத்தில் இருந்தே எல்லாம் தவறாகத் தான் நடைபெறுகின்றது இந்த சம்பவத்தை வைத்து சில அரசியல் ஏற்பாடுகளும் நடைபெறுவதாக அறிய முடிகின்றது
வல்லுநர்களே படித்தால் மட்டும் போதாது அனுபவம் றொம்ப முக்கியம்