சுகாதார நடைமுறைப் பின்பற்ற யாழ்.நகரில் பொலிஸார் விழிப்பூட்டல்

“நாட்டில் கோரோனா தொற்று முற்றாக நீங்கிவிடவில்லை. எனவே யாழ்ப்பாணம் மக்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி அவதானமாக செயற்பட வேண்டியது அவசியம்” என்று யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரசாத் பெர்னான்டோ தெரிவித்தார்.

கோரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பதற்கான சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டியதன் அவசியம் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்பூட்டும் செயற்பாட்டினை யாழ்ப்பாணம் மாநகரில் இன்று பொலிஸார் முன்னெடுத்தனர்.

இதன்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இலங்கை போக்குவரத்து சபையின் சாரதி நடத்துனர்கள், முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் மற்றும் தனியார் பேருந்து சாரதிகள், நடத்துனர்களுக்கு யாழ்ப்பாணம் பொலிஸாரினால் விழிப்புணர்வு செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.

“பேருந்துகளில் பயணம் செய்வோர் கட்டாயமாக முகக்கவசம் அணிந்து பயணத்தை தொடர அனுமதிக்கப்பட வேண்டும், மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்தில் பயணம் செய்வோர் அனைவரும் கைகளை கழுவி சுத்தப்படுத்திய பின்னரே பேருந்தில் ஏற அனுமதிக்கப்பட வேண்டும், பேருந்துகளில் சமூக இடைவெளியை கட்டாயமாகப் பேணவேண்டும், பேருந்துகளில் கட்டாயமாக கிருமி தொற்று நீக்கி விசிறவேண்டும், பேருந்துகளில் புதிதாக ஏறும் பயணிகளிடம் குறித்த சுகாதாரத் திரவம் கையில் தெளித்த பின்னரே பயணத்தை தொடர அனுமதிக்க வேண்டும்” என்று பொலிஸார் அறிவுறுத்தினர்.

முச்சக்கர வண்டிகளில் சாரதி மற்றும் இருவர் மட்டுமே பயணிக்க முடியும் என்றும் பொலிஸார் அறிவுறுத்தினர்.

தொற்று இன்னும் நாட்டிலிருந்து முற்றாக நீங்கவில்லை. கோரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு பொலிஸாராகி எங்களுக்கும் உள்ளது. எனவே மக்கள் எங்களுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

Related Posts