சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த 11 உணவகங்ளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஒரு உணவகத்திற்கு தடைவிதிக்கப்பட்டதுடன் ஏனைய உணவகங்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக யாழ். மாநகர சபை பிரதம பொது சுகாதார பரிசோதர் எஸ். ஜீவநாதன் தெரிவித்தார்.
யாழ். நீதவான் நீதிமன்றினால் ஒரு உணவகத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய உணவகங்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
யாழ். பொது சுகாதார பரிசோதனை நிலையத்திற்குட்பட்ட 11 உணவகங்களில் பொது சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்ட சுகாதார பரிசோதனை நடவடிக்கையின்போது 11 உணவகங்கள் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்தமை கண்டறியப்பட்டு அவற்றுக்கு எதிராக யாழ். நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இதில் 1 உணவகத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய 10 உணவகங்களுக்கு எதிர்வரும் 21 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கியும் யாழ். நீதவான் க. சிவகுமார் தீர்ப்பளித்தார்.
இந்நிலையில், எதிர்வரும் 21 ஆம் திகதிக்குள் உணவகங்களின் குறைபாடுகளை நிவர்த்தி செய்யாத ஏனைய உணவகங்களுக்கு வியாபார தடை விதிக்கப்படுமென்றும் அவர் கூறினார்.
அத்துடன், யாழ். நகர் மற்றும் வண்ணார் பண்ணை பொது சுகாதார பரிசோதனை நிலையத்திற்குட்பட்ட பகுதியில் 2 உணவகங்கள் சுகாதார சீர் கேட்டுடன் இயங்கி வருகின்றதாகவும், உணவகங்களை பரிசோதனை மேற்கொண்ட வேளையில், உணவகங்களை திருத்தி அமைக்குமாறு உத்தரவிட்டுள்ளதாகவும், சுகாதார சீர்கேடுகளை திருத்தியமைக்காத பட்சத்தில் இரு உணவகங்களுக்கு வியாபார தடை விதிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.