யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சினால் அனுப்பி வைக்கப்படும் முக்கியமான சில மருந்துகள் சில தனியார் வைத்தியசாலைகளுக்கு கடத்திச் செல்லப்படுவதாக குற்றஞ் சாட்டப்படுகின்றது.குறிப்பாக யாழ்.போதனா வைத்தியசாலையில் மாத்திரம் நோயாளர்களுக்கு என அமைச்சினால் வழங்கப்படும் மருந்துகள் வைத்தியசாலையில் பணியாற்றும் பணியாளர்கள் மூலமாக கடத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக மிகவும் விலை கூடியதும் இலகுவில் வெளி மருந்தகங்களில் பெற்றுக் கொள்ள முடியாததுமான மருந்து வகைகளே இவ்வாறு கடத்தப்படுகின்றன.
அண்மையில் யாழ்ப்பாணத்தில் கட்டித் திறந்து வைக்கப்பட்ட தனியார் வைத்தியசாலையின் நிர்வாக உத்தியோகத்தர் ஒருவரால் யாழ்.போதனா வைத்தியசாலையிலிருந்து இவ்வாறு மருந்துகள் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்.போதனா வைத்தியசாலை தாதியர்களில் சிலரே இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவதாகக் குற்றஞ் சாட்டப்படுகின்றது.
இவ்வாறு யாழ்ப்பாணத்திலுள்ள பல தனியார் வைத்தியசாலைகள் மருந்துகளை கடத்தி வருபவர்களை ஊக்குவிப்பதாகவும் தெரியவருகின்றது.