சம்பள முரண்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட அதிபர், ஆசிரியர்கள் தீர்மானித்துள்ளனர்.
அதற்கமைய அவர்கள் நாளை (புதன்கிழமை) இவ்வாறு சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “அதிகாரிகளினாலோ அல்லது வேறு வகையிலோ அச்சுறுத்தலேனும் அதிபர், ஆசிரியர்களுக்கு ஏற்படுமாயின் – போராட்டத்தில் பங்கேற்கும் அனைத்து தொழிற்சங்கங்களும் அதனைப் பொறுப்பேற்கும் என்ற உத்தரவாதத்தையும் வழங்கும்.
ஆசிரியர், அதிபர்களின் சம்பள உயர்வை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் மேற்கொள்ளும் போராட்டம் – ஒவ்வொரு ஆசிரியர்களினதும் அதிபர்களினதும் நலனுக்கானதே என்பதை உணர்ந்து அனைத்து அதிபர் ஆசிரியர்களும் சம்பள உயர்வை வலியுறுத்தி சுகயீன விடுமுறை போராட்டம் வெற்றியடைய ஒத்துழைக்கவேண்டும்” என அழைப்பு விடுத்துள்ளனர்.