சீருடை அணிந்தாலும் நாமும் மனிதர்கள் தான் உங்கள் பிரச்சினைகளை எங்களால் நன்றாக புரிந்து கொள்ள முடியும். எனது பதவிக்காலத்தில் முடிந்தவரை தங்களுடைய பிரச்சினைகளைத் தீர்ப்பேன் என யாழ்.மாவட்டத்தின் புதிய கட்டளைத் தளபதி கண்ணகி நலன்புரி மக்களிடம் தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதியாக புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட ஜெகத் அல்விஸ் நேற்று கண்ணகி நலன்புரி நிலையத்திற்குச் சென்று அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தார்.
அதன்போது மக்களுடன் கலந்துரையாடிய கட்டளைத்தளபதி மேற்கண்டவாறு அவர்களுக்கு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நலன்புரி நிலையங்களில் வாழும் மக்களுடைய நிலைமைகளை நான் நன்கு அறிவேன்.
முன்னாள் கட்டளைத் தளபதி உங்களுக்கு எவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தாரோ அதேபோல நானும் முயற்சிகளை எடுப்பேன்.
இங்குள்ள அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளுடன் பேசி இடம்பெயர்ந்து நலன்புரி முகாம்களில் வாழும் மக்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எமக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சீருடை அணிந்தாலும் நாமும் மனிதர்கள் தான். உங்களுடைய பிரச்சினைகளை எங்களால் நன்றாக புரிந்துகொள்ள முடியும்.
எனது பதவிக்காலத்தில் நீங்கள் இருக்கின்ற காணிகளை உரிமையாளர்களிடம் இருந்து பெற்று உங்களுக்கு வழங்கி பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதே எனது விருப்பம்.
உங்களை பலர் பல்வேறு கதைகள் கூறி திசை திருப்ப முயற்சிப்பார்கள் . அவற்றை நீங்கள் நம்ப வேண்டாம். எனவே எங்களுடைய செயற்பாட்டிற்கு மக்களாகிய உங்களுடைய ஒத்துழைப்பும் அவசியம். நாங்கள் நிட்சயமாக அரசஅதிகாரிகளுடன் இணைந்து உங்களுடைய வாழ்வாதார பிரச்சினைகளுக்கும் நல்ல முடிவைப் பெற்றுத்தருவோம் எனவும் மக்களிடம் மேலும் தெரிவித்தார்.
கடந்த 1990 ஆம் ஆண்டு யுத்தத்தினால் இடம்பெயர்ந்து எங்கள் சொந்த இடங்களை விட்டு 25 வருடங்களாக இந்த மழை , வெள்ளம், வாழ்வாதாரம் இல்லாமை, கல்வி இல்லாது வாழ்கின்றோம். எங்களை சொந்த இடங்களில் குடியமர அனுமதியுங்கள் இல்லையேல் இருக்கும் இடத்தில் வசதிகளை ஏற்படுத்தித்தர வேண்டும் என மக்கள் கட்டளைத் தளபதியிடம் தெரிவித்திருந்தனர்.