சீரடி சாயி பாபா இந்துக்களையும் இஸ்லாமியர்களையும் ஒன்றுபடுத்தி அதில் வெற்றியுங் கண்டார் : முதலமைச்சர்

சீரடி சாயி பாபாவின் வியாழக்கிழமை பஜனை கொட்டாஞ்சேனை புதிய செட்டித் தெரு, சாயி மந்திரில்
இன்று காலை 11 மணிக்கு நடைபெற்வறது இதில் வடமாகாண முதலமைச்சர் உரை

குருர் ப்ரம்மா……….
அன்புடைய சாயி பக்தர்களே, சகோதர சகோதரிகளே!

என்னை ஒரு சில வார்த்தைகள் இங்கு பேச அழைத்தமைக்காக உங்கள் ஒழுங்கமைப்பாளர்களுக்கு எனது நன்றியை முதற்கண் தெரிவித்துக் கொள்கின்றேன். ஐம்பது வருடங்களுக்கு முன்னர் என் நண்பர் காலஞ் சென்ற சட்டத்தரணி சண்முகநாயகம் அவர்களின் வழிகாட்டலில் தொடக்கம் பெற்ற சத்ய சாயி மையம் தொடர்ந்து நற்பணியாற்றிக் கொண்டு வந்துள்ளது. அண்மையில் நீங்கள் புதிய கட்டிடத்தைத் திறந்துள்ளீர்கள். அத்துடன் சீரடி சாயிநாதரின் பஜனைகளை வியாழன் காலையில் நடாத்துகின்றீர்கள்.

சீரடி சாயி பாபா இன்றைய காலத்திற்கு, இன்றைய சூழலுக்கு எம் எல்லோர்க்கும் தேவைப்படும் ஒரு ஆன்மீக குரு. அவரின் வலுமிக்க போதனைகளுடன் அவரின் வாழ்க்கையே எமக்கு வழிகாட்டி.

முரண்பட்ட இரு சமயப் பின்னணிகளை ஒன்று சேர்த்து வாழ்ந்தவர் அவர். வேற்றுமைகளில் ஒற்றுமையை விதைத்தவர் அவர். ஒரு சிலர் அவரின் தாய் தந்தையர் பிராமணர் என்றும் அவரை வளர்த்தவர் ஒரு இஸ்லாமிய பக்கிரி என்றுங் கூறுவர். வேறு சிலர் அவர் இஸ்லாமிய பக்கிரி ஒருவரினால் வளர்த்தெடுத்து வந்த போது அவரை வெண்குசா என்ற இந்துமத குருவிடம் ஒப்படைத்ததாகவும் அவர் அதனால் முஸ்லிமாக வளர்ந்து பின்னர் இந்து மத முறைகளைக் கையேற்றார் என்றும் கூறுவர். எது எவ்வாறிருப்பினும் அவர் இந்துக்களையும் இஸ்லாமியர்களையும் ஒன்றுபடுத்தி அதில் வெற்றியுங் கண்டார். இன்று சீரடியில் இந்துக்களுடன் இஸ்லாமியர் முண்டி அடித்துக் கொண்டு அவரின் சமாதியைத் தரிசிக்கச் செல்கின்றார்கள்.

எம்மிடையே இவ்வாறான ஒரு முஸ்லீம் பெரியார் இருந்தார். அவர் யாழ்ப்பாணத்தைச் சேர்தவர். குருபாவா என்பது அவர் பெயர். கொழும்பில் Dr.மாக்கான் மார்க்காரின் அல்ஸ்டன் தெரு இல்லத்தில் நான் பல முறை அவரைச் சந்தித்திருக்கின்றேன். அதன்பின் அவர் அமெரிக்கா சென்று அங்கு ஒரு ஆன்மீகப் பேரியக்கத்தை ஆரம்பித்து காலக்கிரமத்தில் சமாதி அடைந்தார். அவரின் பல பக்தர்கள் இந்து மதத்தினரே.

ஆகவே சீரடி சாய்நாதரின் வாழ்க்கையில் இருந்து நாங்கள் கற்றுக் கொள்ளும் முதற் பாடம் ஒழுங்குபடுத்தப்பட்ட மதங்கள் முக்கியமல்ல, மதங்களுகப்பாலான அவற்றின் உட்கருத்துக்களே முக்கியம் என்பது. வெறும் சமயப் பெயர்களையும், சமயச் சடங்குகளையும், சமயப் பாங்குகளையும் கடந்து சென்றால் அங்கு நாம் காண்பது ஒரேயொரு விடயம் மட்டுமே. இறை பக்தி தான் அது. இறைவனை என்ன நாமத்தைக் கொண்டு அழைக்கின்றோம் என்பது முக்கியமல்ல. அவனை முழு அன்புடன் அழைக்க வேண்டும் என்பதே அவர் கற்றுத்தந்த பாடம். Sabka Malik Ek என்றார். எல்லோரின் இறைவனும் ஒருவனே என்பது அதன் பொருள். அழிந்து போகப்போகும் வஸ்துக்களைக் கைவிட்டு என்றும் நிலை பெற்றிருக்கும் இறைவன் மீது அன்பு செலுத்துங்கள் என்றார். அன்பு, பரோபகாரம், மன்னிக்கும் சுபாவம், போதுமென்ற மனம், உள்மன அமைதி போன்றவற்றையும், குரு மீதும் இறைவன் மீதும் அன்பு செலுத்துவதையும் அவர் வலியுறுத்தினார். ஆன்மீக குருநாதர் ஒருவரிடந் தன்னை எவரேனும் ஒருவர் சரணடையச் செய்தால் அந்த குருவானவர் அவரின் ஆன்மீக ஈடேற்றத்திற்கு வழிவகுப்பார் என்று போதித்தார். அவ்வாறே அவர் இன்றும் சூட்சுமமாய் நிறைந்திருந்து வழிகாட்டி வருகின்றார்.

அவர் எப்போது பிறந்தார், எங்கு பிறந்தார் என்பதெல்லாம் சர்ச்சைக்குரிய விடயங்களாக இருக்கின்றன. ஆனால் சீரடிக்குத் தனது 16வது வயதில் அவர் வந்து சேர்ந்தார் என்பது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. சிறுவயதில் இருந்து ஒரு வேப்ப மரத்தின் கீழ் பல மணி நேரம் தியானத்தில் இருப்பாராம். வெயில், மழை, பனி என்று பாராமல் அவ்வாறு தியானத்தில் இருப்பாராம். குழந்தைகள் இவ்வாறான ஒருவரைக் கண்டதும் அவரைப் பயித்தியம் என்று நினைத்து கற்களை வீசி இம்சை செய்தார்களாம். அதனால் அவர் சில காலம் எங்கோ சென்று தங்கி விட்டு மீண்டும் சீரடிக்கு 1858ம் ஆண்டில் வந்தார். சீரடியில் உள்ள கண்டோப மந்திர் என்ற கோவிலினுள் அவர் நுழைந்ததும் மாகல்சபதி என்ற கோயில் பூசாரி அவரை முதன் முதலில் தரிசித்ததும் ‘ஆவோ சாய்’ என்று வரவேற்றாராம். அதன் பின்னர் தான் அவர் சாயி பாபா என்று அழைக்கப்பட்டார். சாயி என்பது யாசகன் என்றும் பொருள்படும் இறைவன் என்றும் பொருள்படும். பாபா என்பது பிதாவையுங் குறிக்கும் பெரியவர் ஒருவரையும் குறிக்கும். ஆகவே இறைமைத் தன்மையுடைய வறிய பிதாமகர் என்பதே சாயி பாபா என்பதின் அர்த்தம்.

தன் பெயருக்கு ஏற்றவாறு அவர் வறுமையுடன் வாழ்ந்தார். வரங் கொடுத்து வாழ்ந்தார். வரலாறு படைக்க வாழ்ந்தார். சிரத்தாவும் சபூரியும் அவரின் முக்கிய போதனைகள். குருமீது அன்பு செலுத்துவது சிரத்தா. இறைவன் மீது பாரத்தைப் போட்டு விட்டு பொறுமையுடனும் அன்புடனும் மனமகிழ்வுடனும் வாழ்வதே சபூரி. அவ்வாறு கடமையே கண்ணாக வாழ்வது கர்ம யோகத்தினுள் அடங்கும். ‘கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே’ என்ற கீதையின் சாராம்சத்தை அவரும் போதித்தார். ஞான யோகத்தையும் கர்ம யோகத்தையும் அவர் போதித்திருப்பினும் பக்தி யோகத்திற்கே அவர் முதலிடம் கொடுத்தார்.

அதனால்த்தான் அவரின் மறு அவதாரமாகப் பிறந்த சத்திய சாயி பாபா கலியுகத்தில் பக்தியே சிறந்த மார்க்கம் என்பதனை உலகறியக் கூறி வந்தார். அதனால்த்தான் நாமெல்லோரும் சீரடியான் பாதக் கமலங்களை நினைத்து சத்ய சாயியை நினைத்து வியாழக்கிழமை தோறும் பஜனைகள் பாடுகின்றோம்.

இறைவனிடம் சரணாகதி அடைந்து அவன் மீது பாடும் பஜனைக்கு சக்தியுண்டு. நாம் சரணாகதி மனப்பாங்குடன் பாடுவதால் எமது அகந்தை கரைகின்றது. மமதை மறைந்து போகின்றது. அதனால்த் தான் எங்களுள் கண்ணீர் பீறிடுகிறது. ஆனால் அன்பு மேலோங்குகின்றது. முன்னர் எல்லாம் நான் பஜனைகள் பாடி முடிக்கின்ற போது ஏதோ ஒரு சுமையை இறக்கி விட்டது போன்ற அனுபவத்தைப் பெறுவேன்.

பஜனைகளைக் கேட்பதால் உடல், உள்ளம், அறிவு யாவும் ஒரு வித நெகிழ்வைப் பெறுகின்றன. கவலைகள் நிறைந்து பாரிய பிரச்சினைகளை மனத்தில் சுமந்து வருகின்றவர்கள் ஒரு மணித்தியாலம் பஜனைகளைக் கேட்பதால் இந்த மன நெகிழ்வைப் பெறுகின்றார்கள். மனத்தளர்வைப் பெறுகின்றார்கள். அவர்கள் மனம் அமைதி அடைகிறது. பக்தியுடன் பஜனைகள் பாடும் உங்கள் ஒவ்வொருவருக்கும் சீரடி சாயியின் அன்பும் அருளும் என்றும் கிட்டுவதாக!

ஜெய் சாயிராம்!
நன்றி
வணக்கம்

Related Posts