யாழ்ப்பாணம் காங்கேசன்துறை சீமெந்து கூட்டுத் தாபனத்திற்குச் சொந்தமான அரச காணியில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ள மக்களுக்கு வீடுகள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
இந்த அடிக்கல் இன்று திங்கட்கிழமை யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவினால் நாட்டப்பட்டுள்ளது.
வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் காணிகள் அற்ற மக்கள் காங்கேசன்துறை சீமெந்து கூட்டுத் தாபனத்திற்குச் சொந்தமான அரச காணியில் மீள்குடியேற்றப்பட்டனர்.
இவ்வாறு மீள்குடியேற்றப்பட்ட மக்களில் முதற்கட்டமாக 100 பேருக்கு வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்படவுள்ளன. 25 லட்சம் ரூபா செலவில் அனைத்து வசதிகளுடன் 45 நாள் திட்டத்தின் கீழ் இந்த வீடுகள் இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்படவுள்ளன.
இந்த நிகழ்வில் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் செந்தில் நாதன், தெல்லிப்பளை பிரதேச செயலக அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் வலிகாமம் வடக்கு பகுதியைச் சேர்ந்த மக்களின் காணிகள் பல தொடர்ந்தும் உயர் பாதுகாப்பு வலயமாக காணப்படுகின்றது.
அந்த மக்களின் காணிகளை அரசாங்கம் கட்டம் கட்டமாக விடுவித்து வரும் நிலையில் எஞ்சிய காணிகளை விடுவிக்குமாறு வலிகாமம் வடக்கு மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் உயர் பாதுகாப்பு வலயகத்தில் உள்ள காணிகளை விடுவிக்குமாறு தாம் தொடர்ந்தும் கோரிக்கை விடுக்கவுள்ளதாக காங்கேசன்துறை சீமெந்து கூட்டுத் தாபனத்திற்குச் சொந்தமான அரச காணியில் மீள்குயேற்றப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.