சீனி, உப்பு, எண்ணெய் ஆகியவற்றின் வரிகள் அதிகரிக்கப்பட வேண்டும். இதன்மூலம் நாட்டில் இருதய நோயாளர்களின் எண்ணிக்கையை குறைக்க முடியும் என்று சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
மது, சிகரட் பாவனையால் நோய்களுக்கு இலக்காகுபவர்களின் மருத்துவ செலவுகளுக்கு அரசாங்கம் பல இலட்சம் ரூபாய்க்களை செலவு செய்ய வேண்டியுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
கிருலப்பனையிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன இதனைத் தெரிவித்தார்.
அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில், நாட்டில் இன்று 70 வீதமானோர் தொற்றா நோய்களுக்கு உள்ளாகின்றார்.
இதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது கட்டாயமான தேவையாகும்.
வருடா வருடம் அதேபோன்று திடீரென்றும் மது மற்றும் சிகரட்டுக்களுக்கான வரிகள் அதிகரிக்கப்படுகின்றன. இதனை வரவேற்கின்றோம்.
மது சிகரட் பாவனையால் பெருமளவானோர் நோய்களுக்கு உள்ளாகின்றனர். இந்த நோய்களின் சிகிச்சைகளுக்காக அரசு பல இலட்சம் ரூபாய்களை செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது.
பணத்தை கொடுத்து மது, சிகரட் பாவனையை மேற்கொண்டு நோயாளிகளாகுபவர்களுக்கு அரசு பணம் செலவழித்து சுகமளிக்க வேண்டியுள்ளது. இந்நிலை மாறவேண்டும்.
இதுபோன்று நாட்டில் சீனி, எண்ணெய், உப்பு பாவனையால் நீரிழிவு நோய், இரத்த அழுத்தம், இருதய நோய் என்பன ஏற்படுகின்றன.
இதனை தடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். சீனி, உப்பு, எண்ணெய் உட்கொள்ளாததால் எவரும் உயிரிழக்க மாட்டார்கள். எனவே நோய்களை ஏற்படுத்தும் இப்பொருட்களுக்கான வரிகள் அதிகரிக்கப்பட வேண்டும். இந்த யோசனையை நிதியமைச்சருக்கு தெரிவித்துள்ளேன் என்றார்.