இலங்கை விமானப் படைக்கான பராமரிப்புத் தளம் ஒன்றை திருகோணமலை சீனக்குடாவில் உள்ள விமானப் படை முகாமுக்குள் அமைப்பதற்குத் தீர்மானித்துள்ள இலங்கை அரசு அந்தக் கட்டுமானப் பணியை சீனாவிடம் ஒப்படைப்பதற்கும் முடிவு செய்திருக்கின்றது.
அது, புதுடெல்லி அரசு மட்டத்தில் பெரும் சீற்ற அதிர்வலைகளை ஏற்படுத்தியிருப்பதாக இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து தெரிய வருகின்றது. மஹிந்த ராஜபக்ஷவும் ஏனைய மூத்த பாதுகாப்புத்துறை அதிகாரிகளும் சீனத் தரப்புடன் நத்திய பேச்சுக்களை அடுத்தே இந்தக் கட்டுமானப் பணியை சீனாவிடம் ஒப்படைப்பதற்கு முடிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகின்றது.
கடந்த வருடம் மஹிந்த ராஜபக்ஷ சீனாவுக்கு விஜயம் செய்திருந்த சமயம் இந்தக் கட்டுமானப் பணிக்கான பூர்வாங்க முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டன என்று தெரிகின்றது. தொடர்ந்து பொலிவியாவில் ‘ஜி 77’ நாடுகளின் கூட்டத்தில் பங்குபற்றுவதற்காக அங்கு சென்றிருந்த இலங்கை ஜனாதிபதி அந்த மாநாட்டுக்கு இடையே சீன அதிபருடனும் பேசினார்.
அப்போது இந்த விமானப் படைப் பராமரிப்புத் தளம் அமைப்பதற்கான இறுதித் தீர்மானம் எட்டப்பட்டதாகக் கூறப்படுகின்றது. இதனை அடுத்து, இதற்கான அமைச்சரவைப் பத்திரமும் தயாராக்கப்பட்டு அமைச்சரவைக்கு வந்திருப்பதாகத் தெரிகின்றது. இதற்கிடையில் ஜனாதிபதியின் சகோதரரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பஸில் ராஜபக்ஷ தற்போது சீனா சென்றுள்ளார்.
கடந்த புதனன்று சீனாவின் உதவிப் பிரதமர் வாங் யாங்குடன் அவர் பேச்சு நடத்தினார். அந்தப் பேச்சுக்களின் போதும் இந்தக் கட்டுமானப் பணி குறித்துப் பேசப்பட்டதாக ஒரு தகவல் தெரிவித்தது. சீன அதிபர் ஸ்கி ஜின் பிங் இந்த ஆண்டு இறுதியில் இலங்கைக்கு வரவிருக்கின்றார்.
1986 இற்குப் பிறகு சீனாவின் தலைவர் இலங்கை வருகை தருகின்றமை இதுவே முதல் தடவை. இதேவேளை சீனாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்குடன் ‘கடல்வழி பட்டுப் பாதை’ வர்த்தக உடன்பாட்டில் இலங்கை கைச்சாத்திட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணப் பணிகளைத் தொடர்ந்து சீனக்குடா விமானப்படைப் பராமரிப்புத் தளத்தை அமைக்கும் திட்டத்துக்கும் சீனாவுடன் இலங்கை கைகோர்க்கின்றது.
இது, இந்திய அரசுத் தலைமை மட்டத்தில் குறிப்பாக புதிய அரசின் கொள்கை வகுப்பாளர்கள் தரப்பில் கடுஞ்சீற்றத்துடனான அதிர்வலைகளை ஏற்படுத்தியிருப்பதாக அறிய வருகின்றது.