வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றைக் கொண்டுவர முடியாது. அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தில் அதற்கான அனுமதி இல்லை என்று வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா தெரிவித்தார்.
நாடாளுமன்ற தேர்தலில் முதலமைச்சர் நடுநிலை வகிக்கப்போவதாக அறிவித்தமையால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் சிலர், முதலமைச்சருக்கு எதிராக வடமாகாண சபையில் நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றைக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையிலேயே தவராசா மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ‘முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்படுகின்றது என்பது தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்பு எதனையும் நான் அறியவில்லை. ஆனால் 13ஆவது திருத்தச் சட்டப்படி அவ்வாறு செய்வதற்கு சாத்தியமில்லை’ என்றார்.
‘தேர்தலில் நடுநிலை வகிப்பதாக முதலமைச்சர் கூறியிருப்பதால் எவ்வித பிரச்சினைகளும் இல்லை. தனிப்பட்ட நபர்களுக்காக பிரசாரம் செய்யமாட்டேன் என அவர் கூறியிருப்பது ஏற்கத்தக்கது. விருப்பு வாக்கு அடிப்படையிலான தேர்தல் என்பதால், தான் பிரசாரம் செய்ய முடியாது என அவர் கூறியுள்ளார். ஆனால், அவரும் விருப்பு வாக்கின் அடிப்படையிலேயே முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டார்.
கூட்டமைப்பு என்ற ரீதியில் அவர் பிரசாரங்களில் ஈடுபட்டிருக்கலாம். அது கட்சிக்கான பிரசாரமாக அமையும். எமது கட்சியிலும் சிலர் நடுநிலையாகவுள்ளனர். அவர்கள் தனிநபர்களுக்காக அல்லாது கட்சிக்காக பிரசாரம் செய்கின்றனர். இதனை முதலமைச்சரும் செய்திருக்க முடியும்’ என்று தவராசா கூறினார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்துள்ள சமஷ்டி முறையிலான தீர்வு மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வைத்துள்ள ஒரு நாடு, இரு தேசம் என்பன நடைமுறைக்குச் சாத்தியப்படாதவையாகும். தனியே கோஷம் எழுப்புவதற்கு ஏற்ற விடயங்களாகவே அக்கட்சியினரால் இவ்விரு விடயங்கள் பற்றியும் பேசப்படுகின்றன என்று தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ‘வாழ்வாதாரப் பிரச்சினைகள், தொழில் பிரச்சினைகள் என மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றார்கள். அவற்றை முதலில் தீர்க்க வேண்டும். தேர்தலில் முன்னாள் போராளிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். அவர்களை இணைத்து இருக்கலாம்’ என்றார்.
‘புலம்பெயர்ந்த தமிழர்களின் பணத்தில் தமிழ்த் தேசியம் பற்றி பேசிக்கொண்டு இருக்கக்கூடாது. இவ்வாறு பேசிக்கொண்டிருந்தால், எமது பிரச்சினைகள் உள்ளிட்ட பல விடயங்களில் இருந்து நாம் அந்நியப்பட்டுவிடுவோம்.
எமது கட்சியைப் பொறுத்தவரையில் 13ஆம் திருத்தச் சட்டத்தின் குறைபாடுகளை நீக்கி அதனை செழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். அதிகாரங்கள் அதிகரிக்கப்பட வேண்டும். அதிகாரப் பரவலாக்கம் என்னும் விடயம் இருக்க வேண்டும். இதுவே நடைமுறைக்குச் சாத்தியமான வழியாகும்’ என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.