சிவில் நிர்வாகத்தில் காணப்படும் தலையீடுகள் நீக்கப்படும்: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

சிவில் நிர்வாகத்தில் காணப்படும் படைத்தரப்பின் தலையீடுகளை படிப்படியாக நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற யாழ், கிளிநொச்சி மாவட்டங்களுக்கான ஒருங்கிணைப்புக் குழுவின் விசேட கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

யாழ். மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்திய வீட்டுத்திட்டத்திற்கு அமைவாக கட்டுமானப் பணிகள் நிறைவு பெறாமல் இருப்;பதற்கும் இலங்கை அரசுக்கும் எவ்விதமான தொடர்புகளும் இல்லை என்பதுடன், அதற்கு இந்திய அரசினது கட்டட ஒப்பந்தகாரர்களே காரணமாகும்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் இந்திய வீட்டுத் திட்டத்தின் கட்டுமானப் பணிகளின் தற்போதை நிலவரங்கள் தொடர்பாக தமக்கு இரண்டு மாவட்ட அரச அதிபர்களும் அறிக்கை சமர்ப்பிக்கும் பட்சத்திலேயே நடவடிக்கை எடுக்க முடியும்.

படைத்தரப்பினர் பாதுகாப்பு காரணங்களுக்காகவே இதுவரை விடுவிக்கப்படாத பொதுமக்களினதும் ஏனைய பொது இடங்களிலும் இருக்கின்றனர். யாழ்ப்பாணத்தின் பல பகுதிகள் படைத்தரப்பினரிடமிருந்து மீட்டு காணி உரிமையாளர்களிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று மேலுமுள்ள பகுதிகளும் விடுவிக்கப்படும். கிளிநொச்சி மாவட்டத்திலும் படையினர் வசமுள்ள மக்களின் காணிகள் மற்றும் வீடுகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென்பதுடன், அரசின் கொள்கைக்கமைய மீள்குடியேற்றம், அபிவிருத்தி மற்றும் காணியில்லாதவர்களுக்கு காணிகளை வழங்குதல் போன்ற நடவடிக்கைகள் யாவும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் பிரகாரமே இறுதி முடிவெடுக்கப்படும்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் சிவில் நிர்வாகத்தில் படைத்தரப்பினரின் தலையீடுகள் இருக்கும் பட்சத்தில் அவற்றையும் படிப்படியாக நீக்குவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்படும். அவர்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக சில சட்டங்கள் இருக்கின்றபோது அவற்றை உடனடியாக நீக்குவதென்பது சாத்தியமற்றது’ என்றார்.

கிளிநொச்சியிலிருந்து இரணைமடு தண்ணீரை யாழ். மாவட்டத்திற்கு கொண்டுவருவது தொடர்பில் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் நடைமுறைக்கேற்ப நீர்த்தாங்கிகள் அமையப்பெறவுள்ள இடங்கள், இதனால் ஏற்படக்கூடிய சாதக பாதகங்கள் குறித்தும் கோப்பாய் பகுதியில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினது ஒலிபரப்பு கோபுரத்தை அமைப்பதிலுள்ள சாதக பாதக நிலை தொடர்பாகவும் துறைசார்ந்தோரிடம் அமைச்சர் கேட்டறிந்துகொண்டார்.

இரு மாவட்டங்களின் இணைத் தலைவர்களான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஈ.பி.டி.பி. நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார், ஈ.பி.டி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலென்ரின், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன், யாழ். மற்றும் கிளிநொச்சி அரச அதிபர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Posts