வடக்கு மாகாண சபைக்கு உட்பட்ட பாடசாலைகள் மற்றும் திணைக்களங்களில் இடம்பெறும் சிவில் நிகழ்வுகளுக்கு இராணுவத்தினரை அழைப்பது நிறுத்தப்பட வேண்டும் என்பது தொடர்பில் எமது தலைமைகளுடன் கலந்தாலோசித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வி.கே சிவஞானம் தெரிவித்தார்.
இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவரைச் சந்தித்து கலந்துரையாடினார் அதனையடுத்து ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது ஊடகவியலாளர் ஒருவரினால் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கும் முகமானவே இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சிவில் நிகழ்வுகளில் இராணுவம் தலையீடு செய்வது குறித்து தூதுவருக்கு தெரியப்படுத்தி இருந்தேன். அவரும் அதனை ஏற்றுக் கொண்டார். எனினும் எமது ஆளுகைக்கு உட்பட்ட பாடசாலை மற்றும் திணைக்களங்கள் உள்ளிட்ட இடங்களில் இடம்பெறும் நிகழ்வுகளுக்கு இராணுவம் பிரசன்னமாவதை தவிர்க்குமாறு எம்மால் தெரிவிக்க முடியும் .
எனினும் இது நான் மட்டும் முடிவு செய்யும் விடயம் அல்ல. எமது கட்சித் தலைமைகள் மற்றும் முதலமைச்சருடன் கலந்துரையாடியே முடிவு எடுக்க வேண்டும். அத்துடன் பாதுகாப்பு அமைச்சிற்கும் இந்த விடயம் தொடர்பிலும் தெரியப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எதிர்வரும் வடக்கு மாகாண சபை அமர்வுகளில் இதற்கான தீர்மானம் ஒன்றினைக் கொண்டுவர யோசனை ஒன்றினை முன்வைப்பேன்.
இவ்வாறான இராணுவ தலையீட்டினால் சுதந்திரமாக செயற்படவோ கருத்துக்களை தெரிவிக்கவோ முடியாத நிலை ஏற்படுகின்றது. இதற்கான நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என்றார்.
இதேவேளை, வடக்கு மாகாண சபை செயற்படுவதற்கு முன்னர் பாடசாலை மற்றும் திணைக்களங்களின் நிகழ்வுகளுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை அழைக்கக்கூடாது என அளுநர் கட்டுப்பாடு விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
சந்திப்பு தொடர்பில் வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வி.கே சிவஞானம் மேலும் தெரிவிக்கையில்,
பிரான்ஸ் தூதுவருடனான சந்திப்பில் தற்போதுள்ள பிரச்சிகைள் பல கலந்துரையாடப்பட்டன. அதன்படி வடமாகாணத்தில் தனியார் காணிகளை இராணுவம் தமது தேவைகளுக்காக பயன்படுத்தி வருகின்றது. இதனால் மக்கள் மீள்குடியமர முடியாமலும் வாழ்வாதாரத்தை மேற்கொள்ள முடியாமலும் உள்ளனர்.
அத்துடன் எமது நிலப்பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டு விவசாயம் , ஜோக்கட் தொழிற்சாலைகள் மற்றும் விருந்தினர் விடுதிகள் என்பனவற்றை அமைத்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டும் வருகின்றனர் இவ்வாறான செயற்பாடுகள் அவசியம் அற்றது. எனவே மக்கள் சொந்த நிலங்களில் குடியமர்வதற்காக தனியார் காணிகளை விட்டு இராணுவம் வெளியேற வேண்டும்.
மேலும் வடக்கு மாகாணத்தில் இராணுவ பிரசன்னம் அதிகரித்து காணப்படுகின்றது எனவே இராணுவ பிரசன்னம் முற்றாக நீக்கப்பட வேண்டும் . இவ்வாறான அதிகரித்த பிரசன்னங்களால் இராணுவத்தினர் சிவில் வாழ்க்கையில் தலையிட்டு வருகின்றனர் இதனால் சுதந்திரமாக எந்தவொரு செயற்பாட்டினையும் மேற்கொள்ள முடியவில்லை. எனவே இந்த நிலை மாற்றப்பட வேண்டும் என்றும் அவரிடம் கூட்டிக்காட்டினேன்.
அதனையடுத்து இராணுவத்தினர் வடக்கில் இருப்பதால் என்ன பிரச்சினை உள்ளது என்றும் சிவில் நிகழ்வுகளில் கலந்து கொள்வதால் என்ன பிரச்சினை உள்ளது என்றும் என்னிடம் வினவினார்.
அதற்கு இராணுவம் உள்ளதே பிரச்சினை தான். இராணுவம் தற்போதும் எங்களை எதிரியாகவே பார்க்கின்றது. அவ்வாறு இருக்கும் போது நாங்களும் அவர்களை எங்களோடு உள்ளவர்கள் என்று பார்க்கக்கூடிய அளவிற்கு வாய்ப்பில்லை. இதனால் வடக்கில் இருந்து இராணுவம் விலகினால் தான் ஒரு சுமூகமான சூழலை ஏற்படுத்த முடியும் என அவருக்கு தெளிவுபடுத்தினேன்.
அத்துடன் போரினால் பாதிக்கப்பட்ட அதிகளவு பெண்கள் தனது குடும்பத்தினை கவனித்து வருகின்றனர். எனினும் குடும்பத்துக்கான வருமானத்தை பெற்றுக் கொள்ள வெளியில் சென்று சுதந்திரமாக தொழிலை மேற்கொள்ள முடியாத நிலையில் உள்ளனர். இதற்கும் இராணுவ பிரசன்னமே காரணம் என எடுத்துக் கூறினேன்.
அதனை அவர் ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.
அத்துடன் எமக்கு என உள்ள இனத்துவ அடையாளங்களை பாதுகாத்துக் கொள்ளக் கூடிய ஒரு அதிகாரம் கொண்ட கட்டமைப்பினையே நாம் விரும்புகின்றோம். அதற்கு அமையவே நாம் செயற்படுவோம். அதற்குள் இராணுவம் உட்புகுந்து கொள்ளாது விலகிச் செல்ல வேண்டும் என்று தூதுவரிடம் தெரிவித்தேன்.
மேலும் போருக்குப் பின்னர் உட்கட்டமைப்பு வசதிகளை வடக்கில் ஏற்படுத்துவதாக அரசு அறிவித்துள்ளதே அவை எவ்வாறு இடம்பெற்று வருகின்றது என்றும் அவர் என்னிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.
வீதிகள் உள்ளிட்ட சில விடயங்களை அரசு அபிவிருத்தி என்ற அடிப்படையில் செய்து வருகின்றது. எனினும் போரினால் முழுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்ற எமது வடக்கு மக்களுக்கு மீள்குடியேற்றம் மற்றும் வாழ்வாதார முயற்சிகள் இவையே தற்போது மிகவும் அவசியமாக உள்ளது. அதற்கான உதவிகளை வழங்குவதே சிறந்ததாகும்.
இருப்பினும் வீதி அபிவிருத்திகளை நாம் எதிர்க்கவில்லை. எனினும் முன்னுரிமை அடிப்படையில் அரசாங்கம் உட்கட்டமைப்பு வசதிகளை வழங்க வேண்டும். இவ்வாறான விடயங்களை அவரிடம் எடுக்கூறியதாக அவைத்தலைவர் மேலும் தெரிவித்தார்.