சிவில் உடை தரித்தவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டதன் பின்னர் குள்ள மனிதர்களின் நடமாட்டம் ஓய்ந்துள்ளது!

வட்டுக்கோட்டை பகுதியில் கடந்த ஒருமாத காலமாக மக்களை அச்சத்திற்கு உள்ளாக்கிய குள்ள மனிதர்களின் நடமாட்டம் தற்போது ஓய்ந்துள்ளதாக வடமாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.

நேற்று (வியாழக்கிழமை) வடமாகாண சபையின் 130 ஆவது அமர்வு நடைபெற்றது. இதன்போது வடக்கில் இடம்பெறும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளுக்கு, வடமாகாண சட்டம் ஒழுங்கு அமைச்சர் எனும் ரீதியில் முதலமைச்சர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தீர்மானத்தை உறுப்பினர் சபா.குகதாஸ் முன் மொழிந்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் கூறுகையில்,

“கடந்த ஒரு மாத கால பகுதிக்கு மேலாக வட்டுக்கோட்டை , அராலி , சங்கரத்தை , துணைவி , சண்டிலிப்பாய் சீரணி , மாசியப்பிட்டி , ஆனைக்கோட்டை, நவாலி , மானிப்பாய் போன்ற இடங்களிலுள்ள வீடுகளுக்கு, இரவு வேளைகளில் முகத்தை மூடி கட்டியவாறு உள்நுழையும் இனம் தெரியாத நபர்கள் வீட்டில் உள்ளவர்களை அச்சுறுத்தி விட்டு தப்பி செல்வார்கள். அத்துடன் வீடுகளுக்கு கல் வீச்சு தாக்குதலையும் நடாத்துவார்கள்.

குறித்த செயற்பாடுகளால், மக்கள் கடந்த ஒரு மாதகாலத்துக்கு மேலாக அச்சத்தில் உறைந்து மன விரக்தி அடைந்திருந்தனர்.

இந்நிலையில் இச்செயற்பாடுகளுக்கு பின்னணியில் அரசுடன் சேர்ந்தியங்கும் சிவில் உடை தரித்த நபர்கள் இருந்தனர். அவர்களை நாம் அடையாளம் கண்டு, அவர்கள் தொடர்பிலான விபரங்களை வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபரிடம் கையளித்தோம்.

இதனைத் தொடர்ந்து ஒரு சில நாட்களில் குறித்த சிவில் உடை தரித்தவர்கள் அப்பகுதியில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டதன் பின்னர் தற்போது குள்ள மனிதர்களின் நடமாட்டம் ஓய்ந்துள்ளது” என சபா.குகதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Posts