சிவா பசுபதி விவகாரம் : வெளியான செய்திகள் விஷமத்தனமானவை!

தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்டம் தயாரிக்கும் உப குழுவில் சிவா பசுபதியை பங்கெடுக்குமாறு விடுத்த அழைப்பு தொடர்பாகவும், அதனை அவர் நிராகரித்தது தொடர்பாகவும், வெளியான செய்திகள் விஷமத்தனமானவை என்று வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இனப்பிரச்சினைகளுக்கான தீர்வுத் திட்ட யோசனைகளைத் தயாரிக்கும் உபகுழுவில் பங்கெடுக்குமாறு விடுத்த அழைப்பை சிவா பசுபதி நிராகரித்துவிட்டார் என்று இந்திய ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளதே இது உண்மையா என்று விக்னேஸ்வரனிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார். மேலும்,இதற்கு பதில் கூற வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்றும் அவர் கூறினார்.

அவுஸ்திரேலியாவில் வசிக்கும் சிவா பசுபதி தற்போது யாழ்ப்பாணத்துக்கு விஜயமொன்றை மேற்கொண்டு இங்கு தங்கி உள்ளார். தமிழ் மக்கள் பேரவையின் 2 ஆவது கூட்டம் கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றபோது அரசியல் தீர்வு சம்பந்தமாக ஆராயும்பொருட்டு அமைக்கப்பட்ட உபகுழுவில் 15 பேர் இடம்பெறுவர் என்றும் அதில் இருவர் வட மாகாண முதலமைச்சர் சார்பாக நியமிக்கப்படுவர் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. அரசியல் கட்சிகள் சார்பாக ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் இருவரை இக்கூட்டத்தில் முன்மொழிந்திருந்தார்கள்.

இந்த நிலையிலேயே முன்னாள் சட்ட மா அதிபர் சிவா பசுபதியை தனது பிரதிநிதிகளில் ஒருவராக நியமிக்க முதலமைச்சர் விக்னேஸ்வரன் நடவடிக்கைகளை எடுத்திருந்தார். தற்போது 82 வயதுடைய சிவா பசுபதி இலங்கையின் 34 ஆவது சட்ட மா அதிபராக 13 வருட காலம் (1975 – 1988) பணியாற்றியுள்ளார். இவர் ஒரு ஜனாதிபதி சட்டத்தரணியும் ஆவர். ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் வெளிநாடுகளில் பேச்சு நடைபெற்றபோது விடுதலைப்புலிகளின் பேச்சுவார்த்தை குழுவின் ஆலோசகராக இவர் பணியாற்றியிருந்தார்.

இதேவேளை, விடுதலைப்புலிகளின் அரசியல் விவகார குழுவின் பிரதிநிதியாகவும் பணியாற்றியிருந்தார். விடுதலைப்புலிகள் இலங்கை அரசாங்கத்துக்கு இடைக்கால தீர்வாக முன்வைத்த இடைக்கால தன்னாட்சி அதிகார சபையை இந்த அரசியல் விவகார குழுவே தயாரித்திருந்தது.

கொழும்பு ஆனந்தா கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆகியவற்றில் தனது பாடசாலை கல்வியை பயின்ற சிவா பசுபதி, சிலோன் பல்கலைக்கழகத்தில் தனது சட்ட பட்டப் படிப்பை பூர்த்தி செய்து பின்னர் இங்கிலாந்தின் கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப் பின்படிப்பை பூர்த்தி செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts