சிரேஷ்ட ஊடகவியலாளர் தராகி சிவராமின் கொலைக்கான முழுப்பொறுப்பையும் அரசாங்கமும் இராணுவத்தினருமே ஏற்கவேண்டும் என மனித உரிமைச் செயற்பாட்டாளர் அருட்தந்தை சக்திவேல் தெரிவித்துள்ளார்.
சிவராம் கொலைசெய்யப்பட்டு நேற்றுடன் 11 ஆண்டுகள் கடந்த நிலையில் அவரது கொலைக்கு நீதி வேண்டி நேற்று கொழும்பு கோட்டை புகையிரதநிலையத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,
நல்லாட்சி என மார்தட்டிக்கொள்ளும் இந்த அரசாங்கம் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் எந்தவொரு ஆக்கபூர்வமான முடிவுகளை முன்னெடுக்காததை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
ஊடகவியலாளர்கள் லசந்த மற்றும் பிரகீத் எக்னெலிகொட ஆகியோரையும் இராணுவமே படுகொலை செய்தது. அதேபோல் சிவராமையும் இராணுவமே கொலைசெய்திருக்கவேண்டும்.
இந்நிலையில் இவர்கள் கொலைசெய்யப்பட்டதற்கான காரணம் என்ன? கொல்லப்பட்டதன் பின்னணி என்ன என்பதை சுயாதீனமாக விசாரணை செய்யவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.