நான் சேர்ந்து நடிக்க ஆசைப்படும் நடிகர்கள் விஜய் சேதுபதி,சுதீப்: தனுஷ்

“நான், சிவகார்த்திகேயனுடன் நடித்து விட்டேன். விஜய் சேதுபதியுடனும், சுதீப்புடனும் சேர்ந்து நடிக்க ஆசைப்படுகிறேன்” என்று நடிகர் தனுஷ் கூறினார்.

Sivakarthigeyan

கே.எஸ்.ரவிகுமார் டைரக்‌ஷனில், சுதீப்-நித்யா மேனன் ஜோடியாக நடித்துள்ள ‘முடிஞ்சா இவன புடி’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று காலை நடந்தது. பாடல்களை நடிகர் தனுஷ் வெளியிட, நடிகர்கள் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகிய இருவரும் பெற்றுக்கொண்டார்கள்.

“நான் ஈ படத்தில் சுதீப் நடிப்பை பார்த்து விட்டு அசந்து போனேன். உடனே அவருக்கு போன் செய்து பாராட்டினேன். அந்த படத்தை டைரக்டர் பாலுமகேந்திரா பார்த்து விட்டு, “தேசிய விருது குழு தலைவராக நான் இருந்தால், இந்த வருடத்தின் சிறந்த நடிகராக சுதீப்பைத்தான் தேர்ந்தெடுத்து இருப்பேன்” என்றார். இதை சரியான நேரத்தில், சரியான இடத்தில் சுதீப்பிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். இதுதான் சரியான நேரம். சரியான இடம்.

இன்னொரு மொழியில் நடித்து பெயர் வாங்குவது எவ்வளவு வலி என்பது எனக்கு தெரியும். இதை, ‘ராஞ்சனா’ (இந்தி) படத்தில் நான் உணர்ந்தேன்.

நான் சேர்ந்து நடிக்க ஆசைப்படும் நடிகர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். சிவகார்த்திகேயனுடன் ஏற்கனவே நடித்து விட்டேன். விஜய் சேதுபதியுடனும், சுதீப்புடனும் சேர்ந்து நடிக்க ஆசைப்படுகிறேன். அந்த வாய்ப்புகள் விரைவில் அமையும் என்று நம்புகிறேன்.

கே.எஸ்.ரவிகுமார் சிறந்த டைரக்டர் மட்டுமல்ல. நல்ல நடிகரும் ஆவார். இதை ‘தங்க மகன்’ படத்தின்போது தெரிந்துகொண்டேன். டி.இமான், இளையராஜா மாதிரி சுகமான பாடல்களை தருவதில் தேர்ந்தவர். அவருடைய பாடல்களை கேட்கும்போது, சந்தோஷமாக இருக்கும்.” இவ்வாறு தனுஷ் பேசினார்.

விழாவில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, சுதீப், சதீஷ், ரமேஷ் கண்ணா, டெல்லிகணேஷ், சாய் ரவி, டைரக்டர்கள் கே.பாக்யராஜ், பி.வாசு, சேரன், பட அதிபர் ஆர்.பி.சவுத்ரி, இசையமைப்பாளர் டி.இமான், பாடல் ஆசிரியர் மதன் கார்க்கி ஆகியோரும் பேசினார்கள்.

டைரக்டர் கே.எஸ்.ரவிகுமார் வரவேற்று பேசினார். படத்தின் தயாரிப்பாளர் சூரப்பா பாபு நன்றி கூறினார்.

Related Posts